தருமபுரி, செப்டம்பர் 19 (புரட்டாசி 3) -
பென்னாகரம் பருவதன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தைச் சேர்ந்த குழந்தையப்பன், திமுகவில் உறுப்பினராக உள்ளார். அவர் வசிக்கும் பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நீடித்து வந்ததால், பலமுறை அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் மனு கொடுத்தும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்று காலை, திமுக பென்னாகரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பச்சியப்பன் அவர்களை நேரடியாக சந்தித்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்போது, பச்சியப்பன், “என் வீடு தேடியே வருவாயா?” எனவும், ஜாதி பெயரை சொல்லி திட்டியதோடு, “என் கண் முன்னே நிற்காதே, காலையில் உன் முகம் பார்க்க விருப்பமில்லை” என தகாத வார்த்தைகளால் அவமதித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்குள்ளான குழந்தையப்பன், பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், திமுக ஒன்றிய செயலாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
தனது சொந்தக் கட்சியின் ஒன்றிய செயலாளர் மீதே திமுக பிரமுகரான ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம், பென்னாகரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.gif)

