Type Here to Get Search Results !

தருமபுரியில் 8-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி மின்வாரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!


தருமபுரி – செப்டம்பர் 24:
 


தருமபுரியில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மின்வாரிய ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.


மின்துறையை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும், 8-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அனைத்து ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். மேலும், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும், முத்தரப்பு ஒப்பந்தத்தில் ஓய்வூதியப் பாதுகாப்பு அம்சங்களுடன் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மின்வாரியமே ஏற்று நடத்த வேண்டும் என்றும், ஒப்பந்த ஊழியர்களின் பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கான பணிக்காலமாக கணக்கில் கொண்டு ஓய்வூதியத் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும், மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெறும் நாளன்றே கிடைக்க வேண்டிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆர். சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.பி. விஜியன், பொருளாளர் எமீ. சின்னசாமி, மாவட்ட துணைத்தலைவர் ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டு ஓய்வூதியர்களின் பல்வேறு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் பங்கேற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies