Hollywood Movies

Breaking News

தருமபுரியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை.


தருமபுரி, செப்டம்பர் 18, 2025 (புரட்டாசி 2) -

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து தொடங்கிய “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம் தருமபுரி ஒன்றியத்தில் செட்டிக்கரை RPRS மண்டபம் மற்றும் மாரண்டஅள்ளி பகுதிகளில் திட்ட முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.


இந்த முகாம்களில், உடனடியாகத் தீர்வு காணக்கூடிய விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, சுமார் 30-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகள், பிறப்பு சான்றிதழ்கள், மின் இணைப்பு பெயர் மாற்ற ஆணைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டைகள் மற்றும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.


மாநிலம் முழுவதும் ஜூலை 15 முதல் நவம்பர் 2025 வரை 10,000 முகாம்கள் நடைபெற உள்ளன. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் ஜூலை 15 முதல் அக்டோபர் 3 வரை 176 முகாம்கள் நடைபெறவுள்ளன. நகர்ப்புறங்களில் 13 துறைகளின் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகள் வழங்கப்படுகின்றன. முகாம்களில் பெறப்படும் மனுக்கள் உடனடியாகத் தீர்வு காணக்கூடியவை அங்கு தீர்க்கப்படும்; பிற மனுக்கள் அதிகபட்சம் 45 நாட்களில் தீர்வு பெறும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.


இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் எளிதாக மனுக்களை சமர்ப்பிக்க தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் குறைகளை நேரடியாக பதிவு செய்து, விரைவான தீர்வினை பெறும் வகையில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன.


நிகழ்வில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, வட்டாட்சியர் திரு. சௌகத் அலி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  

கருத்துகள் இல்லை

Copying is disabled on this page!