தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள EVM கூட்டரங்கில், பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் (தனி) சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை சீரமைத்து புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பது மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்வது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான திரு. ரெ. சதீஸ், இஆப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தில் தற்போது 12,85,174 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில், 137 வாக்குச்சாவடிகளில் 1200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் என்பதும், இவை சீரமைக்கப்பட உள்ளன என்பதும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், புதியதாக அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி தகுதியான கட்டடங்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கும் தேதியை அடிப்படையாக கொண்டு வாக்குச்சாவடி சீரமைப்பு பணிகள் இறுதிசெய்யப்படும் எனவும் விளக்கப்பட்டது. இப்பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு துணையாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு கவிதா, தேர்தல் துணை வட்டாட்சியர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)