தருமபுரி, செப்டம்பர் 15 (ஆவணி 30) -
பென்னாகரம் ஒன்றியம், ஆச்சாரஅள்ளி ஊராட்சி எட்டியாம்பட்டியில் திமுக சார்பில் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. மாவட்ட பிரதிநிதி பெரியசாமி தலைமை தாங்கி, அண்ணா அவர்களின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஆசாரஅள்ளி கிளை செயலாளர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார்.
வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர் மனோஜ்குமார் 'ஓரணியில் தமிழ்நாடு!' உறுதிமொழியை வாசித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி எண்ணிக்கை குறைப்பு, வாக்காளர் பட்டியல் மோசடி, நீட் தேர்வு, கல்வி நிதி மறுப்பு, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுக்கு எதிரான பாகுபாடு ஆகியவற்றை கண்டித்தும், உழைக்கும் வர்க்கத்தின் பாதுகாப்புக்கான நிதியை கோரியும், “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” என உறுதி மொழி ஏற்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில் துணை செயலாளர் தெய்வானை, நிர்வாகிகள் சின்னசாமி, மகளிர் அணி நிர்வாகி மல்லிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.