பாலக்கோடு, ஜூலை 22 | ஆடி 06 -
பாலக்கோடு சந்தையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் தக்காளிகளை பெருமளவில் கொள்முதல் செய்து வருகின்றனர். சமீபத்தில் பெய்துவரும் தொடர்மழையால், தக்காளி விளைச்சல் குறைந்துள்ளதால், சந்தையில் தக்காளிக்கு உள்ள தேவை அதிகரித்துள்ளது.
இது நேரடியாக விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையான நிலையில், தற்போது ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனையாகிறது. 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி விலை ரூ.50 முதல் ரூ.60 வரை சென்று சேர்ந்துள்ளது.
தக்காளி வரத்து தொடர்ந்து குறைந்தால், விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். திடீரென ஏற்பட்ட விலையேற்றம், பல மாதங்களுக்கு பின்னர் நல்ல லாபம் பெறும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது என, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
- செய்தியாளர் வேலு.