பொம்மிடி ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை கண்காணிக்க தென்னக ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் திரு. பன்னா லால் அவர்கள் அதிகாரிகளுடன் பொம்மிடி ரயில் நிலையத்திற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த நேரத்தில், பொம்மிடி ரயில்வே பயணிகள் நல சங்கம் மற்றும் தென்னக ரயில்ப் பயணிகள் நல சங்கத்தின் சார்பில், பல முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது. குறிப்பாக, கோவை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், கொச்சுவேலி எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மற்றும் உதய் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில்களுக்கு பொம்மிடி ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அனைத்துக்கும் இல்லையெனில், குறைந்தபட்சம் கோவை எக்ஸ்பிரஸ் உட்பட இரண்டு ரயில்களுக்கு நிறுத்தம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், தற்காலிகமாக ஐந்து நாட்கள் மட்டுமே இயக்கப்படும் அரக்கோணம் – சேலம் மெமு ரயிலை வாரத்தில் ஏழு நாட்களும் இயக்க வேண்டும் என்பதும், பயணிகள் வசதிக்காக பிளாட்பார்ம் எண் 2 மற்றும் 3ல் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதும் கோரப்பட்டது. தற்போது நடைமேடை 1ல் உள்ள கழிவறை எப்போதும் திறந்திருக்கும் வகையில் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், சேலம் மார்க்கம் செல்லும் ரயில்கள் தற்போது இரண்டாம் நடைமேடையின் வழியாக இயக்கப்படும் நிலையில், அவை முதல் நடைமேடையின் வழியாக இயக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இக்கோரிக்கைகளை கேட்ட கோட்ட மேலாளர், நடைமேடை 2 மற்றும் 3ல் கழிவறை கட்டும் பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டதோடு, சேலம் மார்க்கம் செல்லும் பாசஞ்சர் ரயில்கள் முதல் நடைமேடை வழியாக இயக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு நேரில் உத்தரவிட்டார். இந்த நிகழ்வில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் அறிவழகன், காமராஜ், ஆசாம்கான், ஜெபசிங், முனிரத்தினம், சங்கீதா, வெங்கடேசன், சிவகுமார், சிவாஜி, தென்னக ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தனசேகர் மற்றும் மூத்த நிர்வாகி சொக்கலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.