தருமபுரி, ஜூலை 29 | ஆடி 13 -
தருமபுரி மாவட்டத்தில் செயல்பாட்டிலுள்ள “அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டம், தமிழக அரசு சார்பில் பாதுகாப்பற்ற மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ள 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காக மேற்கொள்ளப்படும் முக்கியமான நலத்திட்டமாகும். இந்த திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் நலதிட்ட கொள்கையின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. சமூக நலத்துறையின் கீழ், அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கான இந்த நிதி உதவித் திட்டம், அவர்களின் கல்வியைத் தொடரும் வாய்ப்பை உறுதி செய்வதோடு, நிதிநிலை குறைவால் கல்வியைத் தொடர முடியாத நிலையைத் தவிர்க்கும் நோக்கமும் கொண்டது.
இந்த திட்டத்தின் மூலம், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக பெற்றோர் இருவரும் இல்லாத ஆதரவற்ற குழந்தைகள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெற்றோர் உள்ள குழந்தைகள், சிறையில் அடைக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள், மருத்துவ தேவையால் உளவியல்துறையில் அனுமதிக்கப்பட்ட பெற்றோர் உள்ள குழந்தைகள் எனப் பல்வேறு நிலைகளில் உள்ள குழந்தைகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
திட்டத்தின் சிறப்பு அம்சங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், “உங்களுடன் ஸ்டாலின்” என்ற முகாம்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டம் பயனடையக்கூடிய குழந்தைகள் குறித்த விவரங்களைச் சேகரித்து, தகுதி வாய்ந்தோருக்கு திட்டம் கீழ் உதவிகளை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ர. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள், “சமூகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழும் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. பயனாளர்கள் குறித்த விபரங்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்யப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார். இத்திட்டம் தொடர்பான மேலதிக விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.