தருமபுரியில் சிறுகனிம நடைச்சீட்டுகள் இனி இணையவழியில் — மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஏப்ரல், 2025

தருமபுரியில் சிறுகனிம நடைச்சீட்டுகள் இனி இணையவழியில் — மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அறிவிப்பு.


தருமபுரி, ஏப்ரல் 19:

தருமபுரி மாவட்டத்தில் சிறுகனிமக் குத்தகைதாரர்கள் இனிமேல் நடைச்சீட்டுகளை நேரில் அல்லாமல் இணையவழியில் தாங்களாகவே பெற்றுக்கொள்ளும் புதிய முறை 21.04.2025 முதல் அமலுக்கு வரும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்.


இதுவரை ஜூலை 2024 முதல் இணையவழியில் மொத்த அனுமதிச்சீட்டுகளை (Bulk Permits) பெறும் நடைமுறை செயல்பாட்டில் இருந்தது. இந்தச் செயல்முறையில் உரிய கட்டணங்கள் செலுத்தப்பட்டு, அச்சடிக்கப்பட்ட நடைச்சீட்டுகளுக்கு அலுவலக உதவி இயக்குநரின் கையொப்பம் பெற்ற பின்னரே நேரடியாக வழங்கப்படும் முறை நடைமுறையில் இருந்து வந்தது.


அந்த நடைமுறையில் மாற்றமாக, இப்போது 2025-2026ஆம் நிதியாண்டுக்கான நடைச்சீட்டுகள், ஏப்ரல் 21 முதல் இணையவழியாகவே பெறும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, குத்தகைதாரர்கள் தாங்களே இணையதளத்தின் வழியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, நடைச்சீட்டுகளை அச்சடித்துக்கொள்ள வேண்டும்.


நடைச்சீட்டுகளை அச்சடிக்க தேவையான பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஏ4 தாள்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரக அலுவலகத்தால் அஞ்சல் மூலமாக குத்தகைதாரர்களின் முகவரிக்கு அனுப்பப்படும். இந்த தாள்களை பெறுவதற்காக இணையவழியில் முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது.


இது தொடர்பாக சிறுகனிமக் குத்தகைதாரர்கள் தங்களது குவாரி அமைந்துள்ள பகுதிகளில் இணையவழி நடைச்சீட்டு அச்சிடும் வசதிகளை முன்கூட்டியே ஏற்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது. இம்மாற்றம் அமலுக்கு வந்த பிறகு, நடைச்சீட்டுகள் இனி தருமபுரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் நேரடியாக வழங்கப்படாது எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad