தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனை மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் மைய மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், மகப்பேறு தாய்மார்களின் உயிர் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில், தமிழ்நாடு அரசால் மருத்துவ சேவைகளை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், தருமபுரி மாவட்டத்தில் மகப்பேறு தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
மகப்பேறு தாய்மார்களின் உயிர் பாதுகாப்பு, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிதல் மற்றும் தெரிவிப்பு தொடர்பான சட்டங்களின் கடைப்பிடிப்பு ஆகியவற்றின் அவசியம் குறித்து மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. பாலினம் கண்டறிதல் மற்றும் தெரிவிப்பு தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (ஒழுங்குமுறை) சட்டம், 1997 மற்றும் கருத்தரிப்பதற்கு முன் மற்றும் பிறப்புக்கு முந்தைய நோய் கண்டறிதல் நுட்பங்கள் (பாலியல் தேர்வு தடை) சட்டம் - 1994 படி கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மருத்துவமனைகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்.
பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை NQAS, LaQshya, MusQan தேசிய தரச் சான்றிதழ்களைப் பெற்றமைக்காக, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவமனை குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனைகளில் கருத்தடை முறைகள் குறைவாக உள்ளதை எதிர்கொள்ள, கருக்கலைப்பு செய்த தாய்மார்களுக்கு தற்காலிக மற்றும் நிரந்தர கருத்தடை முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், High Order Birth (உயர் பிறப்பு வரிசை) மற்றும் இளம் வயது கர்ப்பம் குறைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் TNCEA மற்றும் PCPNDT விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதுடன், கண்டறியும் சாதனங்கள் முறையாக பரிசோதிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றனவா என்ற ஆய்வு தொடரும் எனவும், சட்டங்கள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு. சாந்தி, துணை இயக்குநர்கள் (குடும்பநலம், காசநோய் மற்றும் தொழுநோய்), துறைத் தலைவர்கள், மருத்துவ அலுவலர்கள், இந்திய மருத்துவ சங்கத் தலைவர், தனியார் மருத்துவமனை மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் மைய மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் மருத்துவ ஆலோசனைக் குழு கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும், மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் மகப்பேறு மருத்துவத்துக்கான முன்னேற்ற நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதிபட தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக