2.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட மேக்லாம்பட்டி ஏரி, பாலக்கோடு, கடமடை, கரகதஅள்ளி, செம்மநத்தம், பேளாரஅள்ளி உள்ளிட்ட கிராம மக்களுக்கு நீராதாரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், இவ்வேரி முழுவதும் சீமை கருவேலமரங்கள் பரவி சென்று இயற்கை நீர்நிலையை மாசுபடுத்தும் அளவுக்கு பரிதாப நிலையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் பலமுறை இம்மரங்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஷ், ஐ.ஏ.எஸ்., அவர்களின் ஆலோசனையின் பேரில், இது தொடர்பான முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, பாலக்கோடு டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை முன்னெடுத்த செயல்திட்டத்திற்கு பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, தர்மம் அறக்கட்டளை, ஜெயம் சமுதாய வள மையம் மற்றும் ஆதி பவுண்டேஷன் ஆகிய தன்னார்வ அமைப்புகள் சிறப்பாக இணைந்து, மேக்லாம்பட்டி ஏரியை சூழ்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் முட்களை அகற்றும் பணியில் தன்னார்வமாக ஈடுபட்டுள்ளன.
இந்த பசுமை இயக்கத்தின் ஒரு பகுதியாக, 2500 மரக்கன்றுகள் நடும் சிறப்பு நிகழ்வும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பல சமூக ஆர்வலர்கள், கிராம பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு பசுமையான எதிர்காலத்திற்காக களமிறங்கினர். மேக்கலாம்பட்டி ஏரியின் மீளுருவாக்கம் மற்றும் பசுமை பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன என்றும், இதை போன்ற முயற்சிகள் மற்ற நீர்நிலைகளிலும் விரிவுபடுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

