Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் குடிநீர், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு.

பாலக்கோடு, ஏப்ரல் 16:

கோடை காலம் தீவிரமடைந்துவரும் நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர், குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் வகை உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்யும் நோக்கில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உணவு பாதுகாப்பு துறையினர் மாபெரும் ஆய்வை மேற்கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் திரு ரெ.சதீஸ், ஐ.ஏ.எஸ். அவர்கள் பரிந்துரையின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் ஏ. பானுசுஜாதா, எம்.பி., பி.எஸ். அவர்களின் மேற்பார்வையில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றியங்களின் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திரு. நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் பல்வேறு தயாரிப்பு, விநியோக மற்றும் விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.


பாலக்கோடு புறவழிச் சாலையில் செயல்படும் ஐஸ்கிரீம் மற்றும் குல்பி தயாரிப்பு நிறுவனத்தில், சுற்றுப்புற சுகாதாரக் குறைபாடு, முறையற்ற மூலப்பொருள் பராமரிப்பு, லேபிள் விவரங்களின் பிழைகள் ஆகியவை கண்டறியப்பட்டன. குறைகளை நீக்க மூன்று நாளில் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் வழங்கப்பட்டதோடு, தயாரிப்பு தரத்தை ஆய்விற்காக அனுப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.


பட்டாணி தெருவில் கையாளப்படும் குளிர்பானங்களில் (ஆரஞ்சு, லெமன், பாதாம் உள்ளிட்டவை) தயாரிப்பு மற்றும் விற்பனை விவரங்கள் அற்ற நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அனுமதிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு தர அடிப்படையில் உரிய பேக்கிங் முறையில் தயாரிக்க விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.


திருமல்வாடி பகுதியில் இயங்கும் குடிநீர் பாட்டில் நிறுவனம் மற்றும் பல விற்பனை நிலையங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கபட்டு, தரப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் நேரடி வெயிலில் வைக்கப்படாதவாறு பாதுகாப்புடன் விற்பனை செய்ய விற்பனையாளர்களுக்கும் விநியோகிப்பாளர்களுக்கும் எச்சரிக்கை வழங்கப்பட்டது.


ஆய்வின்போது, மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.திருப்பதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் இத்தகைய சோதனைகள் தொடர்ச்சியாக நடைபெறும் என நியமன அலுவலர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies