தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தொட்டார்தன அள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணன் (வயது .50) இவரது மனைவி மரகதம். இவர்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.
கிருஷ்ணனுக்கு கடந்த சில மாதமாக தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் வயிற்று வலி தீராததால் அடிக்கடி வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார்.
இந்நிலையில் 17ம் தேதி மதியம் கிருஷ்ணனுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. மனைவியிடம் வயிற்று வலி அதிகமாக உள்ளதாக கூறி உள்ளார். மனைவி மரகதம் மாத்திரை தருவதாக கூறிய நிலையில், விரக்தியில் இருந்த கிருஷ்ணன் அருகில் இருந்த சின்ன பையன் என்பவரது விவசாய கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

