Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரி - மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் என்ன சிக்கல்? மரு. அன்புமணி இராமதாஸ் கேள்வி.


தருமபுரி - மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் என்ன சிக்கல்? 6 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தாதது ஏன்?


தமிழ்நாட்டில்  தொடர்வண்டித் திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்திக் கொடுக்க தமிழக அரசு தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பல தொடர்வண்டித் திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் கையகப்படுத்திக் கொடுக்கப்பட்டு விட்டதாகவும்,  மீதமுள்ள  திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு  விளக்கமளித்துள்ளது. ஆனால், தருமபுரி - மொரப்பூர்  தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டத்திற்கு நிலங்களைக் கையகப்படுத்தாததற்கு  தமிழக அரசு கூறியிருக்கும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது.


தருமபுரியிலிருந்து  மொரப்பூருக்கு 36 கி.மீ தொலைவுக்கு புதிய அகலப்பாதை அமைக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்திற்காக மொத்தம் 78.55 ஹெக்டேர் நிலம் தேவை.  இதில் வெறும் 8.25 ஹெக்டேர் அதாவது 10.50%  நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்களில் 24.00 ஹெக்டேர் நிலங்களுக்கு நிலம் கையகப்படுத்துதலில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும்,  அதற்கு மாற்றாக மாற்று வழித்தடம் அமைக்கலாம் என தொடர்வண்டித்துறை தெரிவித்திருப்பதாகவும் தமிழக அரசு கூறியிருக்கிறது. மீதமுள்ள  46.30 ஹெக்டேர்  நிலங்களை கையகப்படுத்தித்  தருவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், 6 ஆண்டுகள் ஆகியும், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் நிலம் கையகப்படுத்தித் தரப்படவில்லை.


1941-ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட தருமபுரி - மொரப்பூர் பாதையில் மீண்டும் போக்குவரத்துத் தொடங்கப்பட வேண்டும் என்பது தருமபுரி பகுதி மக்களின் 84 ஆண்டு கால கனவு.  அந்தக் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக போராடி, தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வைத்தவன் நான். அதன்பிறகும்  அந்தத் திட்டத்தில் எந்த  முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வைத்து 2019-ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டச் செய்ததும் நான் தான். மொத்தம் ரூ.358.95 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கு தேவையான நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுத்திருந்தால் ஆண்டுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும்.


ஆனா, திமுக அரசு நிலம் கையகப்படுத்துவதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. அதன் விளைவு 2023-24-ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியை செலவழிக்க முடியவில்லை என்பதால், அந்த நிதி ரூ.49.37 கோடியாக குறைக்கப்பட்டு விட்டது. மாற்று வழித்தடத்திற்காக ரெட்டிஅள்ளி, அளே தருமபுரி, செட்டிக்கரை, மூக்கனூர் ஆகிய பகுதிகளில் 24 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்.  இதற்கான திட்டத்தை தொடர்வண்டித்துறையிடம் பேசி தமிழக அரசு இன்னும் இறுதி செய்யவில்லை. மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என்றாலும் அவற்றை அரசு இன்னும் கையகப்படுத்தித் தரவில்லை.


தருமபுரி - மொரப்பூர் புதிய அகலப்பாதைத்  திட்டத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிக்காக ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட 13 அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் ஒரு வட்டாட்சியர் இரண்டு உதவியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மீதமுள்ள 10 வருவாய்த்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர்.  நிலங்களைக் கையகப்படுத்துவதில் தமிழக அரசு எவ்வளவு அலட்சியம் காட்டுகிறது என்பதற்கு இது தான் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.


தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையிலிருந்து நேரடியாக தொடர்வண்டிப் பாதை இல்லாத ஒரே மாவட்டத் தலைநகரம் தருமபுரி தான். இந்த நிலையை மாற்றி தருமபுரியை சென்னையுடன் தொடர்வண்டி மூலம் இணைக்க இந்தத் திட்டம் மிகவும் அவசியமாகும்.  இதை உணர்ந்து கொண்டு தருமபுரி - மொரப்பூர் புதிய அகலப்பாதைத்  திட்டத்திற்கு தேவையான நிலங்களை  தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கையகப்படுத்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என தனது X தள பதிவில் குறிப்பிட்டுள்ளார் மரு. அன்புமணி ராமதாஸ்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies