Type Here to Get Search Results !

தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் அமைந்துள்ள தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தொப்பூர் கணவாய் பகுதியில் ஏற்படும் தொடர்ச்சியான சாலை விபத்துகளை தவிர்க்கும் நோக்கத்தில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சீரமைப்பு மற்றும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது. மார்ச் 18, 2025 அன்று, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இந்த பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.


ஆய்வின் போது, மேம்பாலம் அமைக்கும் பணிகள் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், அசம்பாவிதங்கள் ஏற்படாமல், குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், பாளையம்புதூர் சுங்கச்சாவடி அலுவலகத்தில், தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பு திட்டம் செயல்படுத்துவது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.


அதனைத் தொடர்ந்து, தருமபுரி நகராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மற்றும் நுண் உர செயலாக்க மையத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாய்கள் கருத்தடை மையத்தின் பராமரிப்பு பணிகள் முடிவடையும் நிலையில் இருப்பதால், விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தினார். நுண் உர மையத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார் மற்றும் தளவாட உபகரணங்களை வழங்கினார்.


பின்னர், காரிமங்கலம் வட்டாரம் நாகதாசம்பட்டி நியாய விலைக்கடையை பார்வையிட்டு, அத்தியாவசியப் பொருட்களின் தரத்தை பரிசோதித்தார். பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவேடுகள் பராமரிப்பு மற்றும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதி செய்தார். அதேபோல், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்டு, திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.


இந்த நிகழ்வுகளில், தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி. லட்சுமி நாட்டான் மாது, சேலம் திட்ட செயலாக்க அலகு இயக்குநர் திரு. சீனிவாசலு, பில்கான் நிறுவன உதவி துணைத்தலைவர் திரு. டி.கே. சின்ஹா, நகராட்சி ஆணையர் திரு. சேகர், பொறியாளர் திருமதி. எஸ். புவனேஸ்வரி, நகர் நல அலுவலர் திரு. இலட்சியவர்ணா, வட்டாட்சியர்கள் திரு. சிவக்குமார், திருமதி. லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies