மக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று டி.ஆர்.பி தேர்வில் வெற்றிபெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர் அதில், கடந்த ஜூலை 21 2024 அன்று டிஆர்பி வரலாற்றில் முதல்முறையாக ஆசிரியர் பணி நியமனத்திற்கு நியமனத் தேர்வு என்ற ஒரு தேர்வை அரசு அறிவித்தது. அந்த தேர்வை ஜூலை 21 அன்று இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 25,000 பேர் எழுதியுள்ளோம். அந்தத் தேர்வின் உத்தேச விடை குறிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே விரைந்து உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடவும், அதுமட்டுமின்றி வெறுமனே 2753 காலிப்பணியிடங்களை மட்டுமே நிரப்ப அறிவித்துள்ளது.
அதனை மறு ஆய்வுக்கு உட்படுத்தி நிதி நிலையை காரணம் காட்டாமல் வருடாந்திர அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 6500 காலி பணியிடங்களையும் நிரப்பி இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும். அடிப்படைக் கல்வியான தொடக்கக்கல்வியை அரசு மீட்டெடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசின் கவன ஈர்ப்பு செயல் வழியாக கோரிக்கை மனு இன்று அளிக்கப்பட்டது.

