Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

விவசாயிகளுக்கு பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் இயந்திரங்கள் வாங்க மானியம் - முழு விவரம்.


தமிழ்நாடு அரசு, வேளாண் உற்பத்தியையும், விவசாயிகளின் நிகர வருமானத்தையும் அதிகரித்திட வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தனை செயல்படுத்தி வருகிறது. 


இத்திட்டத்தின் மூலம் விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவதோடு, குறித்த காலத்தில் பயிர் சாகுபடி செய்திடவும் வழிவகுக்கப்படுகிறது. நடப்பு 2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையில் மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத் துறை அமைச்சர் அவர்களால் அறிவித்தவாறு தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் 4000 எண்கள், விசைக்களையெடுக்கும் கருவி (பவர் வீடர்) 4000 எண்கள் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வழங்கப்பட்டுவருகிறது.


தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பெற அதிகபட்சமாக ரூ.1.20 இலட்சம் விசைக்களையெடுப்பான்களுக்கு அதிகபட்சமாக ரூ.63 ஆயிரம் அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு, ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது. இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.


மேலும், இத்திட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்புத் தொகையியனை குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள மானியத்துடன் 20 சதவீத கூடுதல் மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆதி திராவிடர் பழங்குடியினர் பிரிவினைச் சாந்த சிறு, குறு விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் வாங்கிட 20 சதவிகிதம் கூடுதல் மானியமாக ரூ.48,000/-ம் விசைக்களை எடுக்கும் கருவி வாங்கிட கூடுதல் மானியமாக ரூ.25,200/-ம் வழங்கப்பட்டு வருகிறது. 


எனவே பவர்டில்லர்கள் வாங்கிட அதிகபட்சமாக ரூ.1,68,000/-ம் விசைகளை எடுக்கும் கருவி வாங்கிட அதிகபட்சமாக ரூ.88,200/-ம் வரை மானியம் ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. உதாரணமாக பவர் டில்லரின் மொத்த விலை தோராயமாக ரூ.2,40,000/- எனில் ரூ.1,68,000/- மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.72,000/- மட்டும் செலுத்தினால் போதும். விசைக்களை எடுக்கும் கருவியின் மொத்த விலை தோராயமாக ரூ.1,30,000/- எனில் ரூ.88,200/- மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.41,800/- மட்டும் செலுத்தினால் போதும். மேலும் இம்மானியத்தொகையானது இயந்திரங்களின் மொத்த விலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.


பொது பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் 10 சதவீத கூடுதல் மானியம் அதிகபட்சமாக ரூ.12,600/- விசைகளை எடுக்கும் கருவிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே ஒட்டுமொத்தமாக விசைக்களை எடுக்கும் கருவி வாங்கிட அதிகபட்சமாக ரூ.75,600/- வரை மானியம் பொது பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. உதாரணமாக விசை களை எடுக்கும் கருவியின் மொத்த விலை தோராயமாக ரூ.80,000/- எனில் ரூ.48,000/- மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.32000/- மட்டும் செலுத்தினால் போதும். மேலும் இம்மானியத் தொகையானது இயந்திரங்களின் மொத்த விலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.


விவசாயிகள் தங்களின் பங்களிப்பு தொகையினை இணையவழி (RTGS/NEFT) அல்லது வங்கி வரைவோலை மூலமாகவோ சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கோ அல்லது விநியோகஸ்தருக்கோ அல்லது முகவருக்கோ செலுத்தி பவர் டில்லர், விசைக்களை எடுக்கும் கருவி போன்ற வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றுக்காள்ளலாம். மேலும் இத்திட்டம் தொடர்பாக முழு விவரங்களை பெற்று பயனடைய விருப்பமுள்ள விவசாயிகள் 


1). உதவி செயற்பொறியாளர்(வே.பொ) வேளாண்மைப் பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி (தொலைப்பேசி: 04342 296132,) 


2). உதவி செயற்பொறியாளா(வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகம், திருப்பத்தூர் மெயின் ரோடு, அரூர், தருமபுரி (தொலைப்பேசி: 04346296077) அலுவலகங்கள் அல்லது 


3) வட்டார அளவில் வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர்(வே.பொ.) / இளைநிலை பொறியாளர்(வே.பொ.)-களை தொடர்பு கொண்டு உரிய வழிமுறைகளின்படி மானியத்தில் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies