Type Here to Get Search Results !

தமிழக இளைஞர்கள் எதிர்காலத்தில் வளமானவர்களாக உருவாக வேண்டும் என்றால் மத்திய அரசின் கல்வித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள பாரத மாதா ஆலயத்தில், 2022-ம் ஆண்டு அத்துமீறி நுழைந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக இன்று (7-ம் தேதி) தருமபுரி நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதற்காக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர். 


அப்போது செய்தியாளர்களை சந்தித்து கே.பி.ராமலிங்கம் பேசியது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள கல்வி திட்டம் தரமானது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைசிறந்த கல்வியாளர்களை கொண்டு உருவாக்கப்பட்டது.  தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்தில் ஒரு அரசு நடுநிலைப் பள்ளியின்  ஆசிரியர் ஒருவர் தனக்கு பதில் வேறு ஒருவரை நியமித்து பாடம் நடத்தி வந்த நிகழ்வு கல்வித் துறையை சீரழிக்கும் நிகழ்வாக உள்ளது. 


தற்போது தமிழக கல்வித் துறையும் இதுபோன்றுதான் செயல்பட்டு வருகிறது.  மத்திய அரசின் கல்வித் திட்டத்தை குறை கூற இவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை. மத்திய அரசின் கல்வி திட்டம் மிகச்சிறந்த கல்வி திட்டம். இந்த கல்வி திட்டத்தை ஒரு காலத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியே வரவேற்றுள்ளார். 


சீரழியும் நிலையில் உள்ள கல்வித் துறையை சீராக்க வேண்டும் என்றால் தமிழக அரசு மத்திய அரசின் கல்வி திட்டத்தை ஏற்று செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் வளமான திறமையான இளைஞர்களை உருவாக்க முடியும். திமுக-விற்கு பிரதான எதிர்க்கட்சி பாரதிய ஜனதா கட்சி தான், அதிமுக அல்ல. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஒரு பகுதி பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். நேற்று எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டத்தில் பேசிய போது அதிமுகவுக்கு திமுக மற்றும் பாஜக தான் எதிர்க்கட்சிகள் என்று கூறியுள்ளார். அது தவறானதாகும். 


திமுகவின் அராஜக ஆட்சிக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் நல்ல, ஊழலற்ற ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. 


தேசம் முழுவதும் 10 கோடிக்கு மேல் உறுப்பினர்களை சேர்த்து தற்போது 15-ஆவது கோடியை எட்டும் நிலையில் பாஜக வளர்ந்து வருகிறது.  உலக அரங்கில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய ஜனநாயக அரசியல் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அதிமுகவுக்கு எதிரி பாஜகவும் திமுகவும் என பேசி வருகிறார். இவ்வாறு கூறினார் கே.பி.ராமலிங்கம். தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, வரவேற்கப்பட வேண்டியது. இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

 

பல்வேறு துறைகளில் இருந்து ஒரு லட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று அப்போது அவர் தெரிவித்திருந்தார்.  அந்த வகையில் தற்போது ஒரு இளைஞர் அரசியலுக்கு வந்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.  அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் உலகின் தலைசிறந்த தலைவரான நரேந்திர மோடி எனக்கு வாழ்த்து கூறியதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 


கிருத்துவ, இஸ்லாமிய தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி வருகின்றனர்.  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இனவாத, மதவாத அரசியலுக்கு சம்பந்தப்பட்டவர் அல்ல.  மத்திய அரசு தொடர்ந்து ஊழலற்ற நல்லாட்சியை மக்களுக்கு வழங்கி வருகிறது. எந்த மத்திய அமைச்சர்கள் மீதும் எவ்வித ஊழல் குற்றச்சாட்டும் இதுவரையில் யாராலும் கூற முடியவில்லை. அதேபோல, தமிழகத்திலும் ஊழலற்ற நல்லாட்சியை பாரதிய ஜனதா கட்சி அமைக்கும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884