Type Here to Get Search Results !

தருமபுரி புத்தகத்திருவிழா தொடங்கியது.


பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்து அரங்குகளை பார்வையிட்டு சென்று விடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், புத்தகங்களை வாங்கி சென்று, புத்தக வாசிப்பு மேற்கொண்டு மிகச் சிறந்த ஆளுமை மிக்க மனிதராக வாழ்வில் முன்னேறுவதோடு, அறிவை பெருக்கி கொள்ள வேண்டும்.


தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகியவை இணைந்து நடத்தும் 6-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவினை மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று தொடங்கி வைத்து, புத்தக அரங்குகளை பார்வையிட்டு, தகவல்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் வேளாண்மைத்துறை சார்பில் ரூபாய் 133 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும், மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம், விடியல் பயணம், நான் முதல்வன், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம், தருமபுரி சிப்காட் அமைத்தல், கலைஞரின் கனவு இல்லம் போன்ற திட்டங்களின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சிறப்பான திட்டங்களை வழங்கியுள்ளார்.


தருமபுரி மாவட்டத்தில் காவிரி ஆற்றில் கிடைக்கப்பெறும் உபரிநீரை மாவட்டம் முழுவதும் உள்ள வறண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்புவதற்காக தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு செயல்படுத்தும் என மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தகவல் தருமபுரி மாவட்டம், மதுராபாய் சுந்தரராஜ்ராவ் திருமண மண்டபத்தில் தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகியவை இணைந்து நடத்தும் 6-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவினை (2024) மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (04.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கிவைத்து, இப்புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த புத்தக அரங்குகளை பார்வையிட்டார்.


மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்டந்தோறும் புத்தக திருவிழாக்களை நடத்தி, புத்தக வாசிப்பை அதிகரிக்க செய்ய வேண்டுமென ஆணையிட்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து, மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் புத்தக வாசிப்பு, அறிவை பெருக்கும் வகையிலான இப்புத்தகத் திருவிழாக்கள் மாவட்டங்கள்தோறும் நடத்திட தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து, புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றது. 


தருமபுரி மாவட்டத்தில் இப்புத்தக திருவிழா நடத்திட அரசின் சார்பில் ரூ.20.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் நூலக வாசிப்பு பழக்கத்தை பொதுமக்களுக்கு ஏற்படுத்த அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் என்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளும் ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, நூலகம் அமைக்கப்பட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க, தருமபுரி மாவட்டத்தில் 6-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா இன்று (04.10.2024) முதல் 13.10.2024 வரை 10 நாட்கள் நடைபெறுகின்றது. பொதுமக்கள் கலந்துகொள்கின்ற பொதுநிகழ்வான இப்புத்தக திருவிழாவில் கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இப்புத்தக திருவிழாவில் 60க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ரூபாய் ஒரு கோடியே 50 இலட்சம் மதிப்பில் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக திருவிழாவில் 60 ஆயிரம் நபர்கள் கலந்துகொண்டு ரூபாய் 1 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாசிப்பின் முக்கியத்துவம் பற்றியும், பெண்கல்வி பற்றியும், சமூகம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனைச் சார்ந்து, போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்குப் புத்தகத் திருவிழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.


நாம் அனைவரும் தினம் தினம் ஏதாவது ஒன்றை புதிது புதிதாக கற்றுக் கொள்கிறோம். கற்றலில் பல வகை இருப்பினும் புத்தக வாசிப்பின் மூலம் கற்றுக்கொள்ளுதல் என்பது மிக முக்கியமானது. பல நூல்களைப் படிப்பதன் மூலம் சிறந்த அனுபவத்தை பெறுவதொடு, உயர்ந்த அறிவை நம்மால் பெற முடியும். மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் சிறப்பான வாழ்க்கைக்கும், சிறந்த வளர்ச்சிக்கும் கல்வி மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து, கட்டாயம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திகொண்டு, நன்றாக கல்வியினை கற்க வேண்டும். 


நாம் ஒரு புத்தகத்தை படித்து விட்டால், அடுத்தடுத்து தொடர்ந்து புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு விடும். நாம் நம் வாழ்க்கையில் மிகச்சிறந்த உயரத்திற்கு செல்ல வேண்டுமானால் புத்தகவாசிப்பை தினந்தோறும் பின்பற்றி கற்றல் வேண்டும். இந்த புத்தகத் திருவிழா இலட்சக்கணக்கான நல்ல புத்தகங்களை ஒரே இடத்தில் பெறுவதற்கான அருமையான வாய்ப்பாகும். தமிழ்நாடு அரசு உருவாக்கி தந்திருக்கின்ற இந்த பெரிய வாய்ப்பை அனைவரும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 


புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்து அரங்குகளை பார்வையிட்டு சென்று விடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், புத்தகங்களை வாங்கி சென்று, புத்தக வாசிப்பு மேற்கொண்டு மிகச் சிறந்த ஆளுமை மிக்க மனிதராக வாழ்வில் முன்னேறுவதோடு, அறிவை பெருக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.


இதனைதொடர்ந்து, மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 1 இலட்சம் மதிப்பிலான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை அதியமான்கோட்டை மற்றும் அரூர் ஆகிய 2 நூலகங்களில் போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் பயில்வதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினார். தருமபுரி புத்தக திருவிழாவை முன்னிட்டு பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் பேச்சுபோட்டிகளில் வெற்றி பெற்ற 30 மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் புத்தகப்பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.


மேலும், இப்புத்தக திருவிழாவில் தீராப்பெருவெளி மற்றும் விடுதலைபோரில் தருமபுரி ஆகிய 2 புத்தகங்களை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்டார். முன்னதாக, தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் நீட்டிப்பு/மாற்றியமைக்கப்பட்ட வழித்தடங்களுக்கான பேருந்து சேவைகளை மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து துவக்கிவைத்தார்.


பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பொதுமக்களின் பேருந்து சேவை அளிப்பதற்காக தருமபுரி - இலளிகம் செல்லும் பேருந்தினை பூதனஅள்ளி ஊருக்குள் சென்று வருமாறும், தருமபுரி - மிட்டாரெட்டிஹள்ளி வரை செல்லும் பேருந்தினை கோம்பேரி மாரியம்மன் கோவில் வரை நீட்டித்தும், தருமபுரி - வத்தல்மலை வரை செல்லும் பேருந்தை கூடுதல் நடைகள் இயக்கியும், தருமபுரி – நடுப்பட்டி செல்லும் பேருந்தினை ஜடையம்பட்டி ஊருக்குள் சென்று வருமாறும், அரூர் – சிலம்பை மற்றும் கோம்பை – அரூர் செல்லும் பேருந்தை கோபால்பட்டி, பாப்பனாவலசை, கூடலூர், தீர்த்தமலை வழியாக வழித்தடம் மாற்றியும் என 5 மகளிர் விடியல் பயணம் செய்யும் பேருந்து வழித்தடங்கள் நீட்டிப்பு/மாறுதல் செய்து இயக்கப்பட உள்ளது. மேற்படி பேருந்து சேவை மூலம் பூதனஅள்ளி, கோம்பேரி மாரியம்மன், கொட்டலாங்காடு, சின்னாங்காடு, குளியனூர், ஒன்றியங்காடு, பால்சிலம்பு, மன்னாங்குழி, பெரியூர், வத்தல்மலை, கோபால்பட்டி, பாப்பனாவலசை, கூடலூர் மற்றும் ஜடையம்பட்டி ஆகிய கிராமங்கள் பேருந்து வசதி பெறுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என சுமார் 8711 பேர் பயன்பெற உள்ளனர்.


இந்நிகழ்வுகளின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.எஸ்.மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ்குமார்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல பொதுமேலாளர் திரு.செல்வம், தருமபுரி தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் மரு.இரா.செந்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதிசந்திரா, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.சையது முகைதீன் இப்ராகிம், தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான்மாது, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மோகன், வட்டாட்சியர் திரு.சண்முகசுந்தரம் மாவட்ட நூலக அலுவலர் திருமதி.அர.கோகிலவாணி கைம்பெண் நலவாரிய உறுப்பினர் திருமதி.ரேணுகாதேவி, தகடூர் புத்தகப் பேரவை தலைவர் திரு.இரா.சிசுபாலன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies