தருமபுரி மாவட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி கிராமம் எர்ரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் அமைந்துள்ள கே.ஜே. மாளிகையில் தருமபுரி வட்டம், அதகப்பாடி, நல்லம்பள்ளி வட்டம் தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஅள்ளி ஆகிய கிராமங்களில் புதிய தொழிற்பூங்காவை சிப்காட் (SIPCOT) நிறுவனம் நிறுவ சுற்றுச்சூழல் அறிவிப்பாணை சட்டப்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் அவர்கள் தலைமையில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முன்னிலையில் பொது மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று (11.06.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அவர்கள் வரவேற்புரையாற்றினார். சுற்றுச்சூழல் ஆலோசகர் சென்னையை சேர்ந்த HECS நிறுவனத்தின் அலுவலர்கள் தருமபுரி வட்டம் அதகப்பாடி, நல்லம்பள்ளி வட்டம் தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஅள்ளி ஆகிய கிராமங்களில் அமைய உள்ள புதிய சிப்காட் தொழிற்பூங்காயில் அமைய உள்ள தொழிற்சாலைகள் மற்றும் அவைகளால் சுற்றுச்சூழல் பாதிப்படையாத நிலையை உருவாக்க சிப்காட் நிறுவனம் எடுக்க உள்ள நடவடிக்கைகள், கட்டமைப்புகள் ஆகியவை தொடர்பாக விளக்கம் அளித்தார்கள்.
மேலும் இதுதொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் கேட்டதில் சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தார்கள். சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்படைக் கூடாது, ஏற்கனவே வளர்ந்துள்ள பெரிய மரங்களை பாதுகாக்க வேண்டும், மேலும் அதிக அளவில் மரங்கள் வளர்க்கப்பட வேண்டும், நீர்நிலைகள் அதன் தன்மை மாறாமல் பாதுகாக்கப்பட வேண்டும், உருவாக்கப்படும் தொழிற்சாலைகளில் உள்ளுர் மக்கள் மற்றும் நிலம் வழங்கிய நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும், சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்டையாமல் இருக்க வேண்டும் என்ற கருத்துக்களை பொதுமக்கள் தெரிவித்தார்கள்.
மேலும் முன்னாள் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணியன் மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.வெங்கடேஸ்வரன் ஆகியோர் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படுவதற்கான அவசியத்தையும், உள்ளுர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும் எனவும் சுற்றுச்சுழல் பாதிப்படையாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில் தருமபுரி சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. பூங்கோதை, தருமபுரி சிப்காட் திட்ட அலுவர் திரு.ராஜ்குமார், நிர்வாக பொறியாளர் திரு.வெங்கடாசலம், உதவி பொறியாளர் திருமதி. சிந்து, தருமபுரி வட்டாட்சியர் திரு. ஜெயசெல்வன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் திருமதி. பார்வதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.