வரும் 22ஆம் தேதி தருமபுரி மாவட்ட தொழில் முதலீடு மாநாடு நடைபெற உள்ளது - மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 நவம்பர், 2023

வரும் 22ஆம் தேதி தருமபுரி மாவட்ட தொழில் முதலீடு மாநாடு நடைபெற உள்ளது - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சியில் முதன்மையான மாநிலமாக மாற்றிட தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், அதன் அடிப்படையில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திடவும், நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகின்ற 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. அனைவரையும், உள்ளடக்கிய நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சியினை நோக்கமாக கொண்டு டிரில்லியன் டாலர் பொருளதாரத்தை அடைவதில் இம்மாநாடு முக்கிய பங்கு வகிக்கும்.


அதிக அளவில் முதலீட்டாளர்கள் பங்கேற்கவும், மாநிலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் அதிகப்படியான முதலீடுகளை திரட்ட அதிக அளவிலான சாத்தியக்கூறுகள் உள்ளதால், ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் முதலீடுகள் மாநாடு ஒன்றினை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடையே அதிகப்படியான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உள்ளூர் வளத்தைப் பொறுத்து, மாவட்டங்களில் முதலீட்டு வாய்ப்புகளை கண்டறியவும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் உள்ள வாய்ப்புகளை ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு எடுத்துச்செல்லவும், வருங்கால தொழில் முதலீட்டாளர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு தொழில் வளத்தை பெருக்குவதே இந்த தொழில் முதலீடுகள் மாநாட்டின் நோக்காகும்.


உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ஐ முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்திற்கு ரூ.500 கோடி மதிப்பிலான முதலீடுகள் பெற்று பல்வேறு துறைகளில் தொழில்கள் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நமது மாவட்டத்தில் 46 தொழில் நிறுவனங்கள் மூலம் ரூபாய் 696.12 கோடி புதிய முதலீடுகள் கண்டறியப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


எனவே, இம்மாவட்டத்தின் தொழில் முதலீடுகள் மாநாடு 22.11.2023 புதன்கிழமையன்று பிற்பகல் 3.00 மணியளவில் தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரிகருத்தரங்கு கூடத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் மாண்புமிகு வேளாண்மை - உழவர்நலத்துறை அமைச்சர் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமை தாங்கி நடத்தவும் இசைந்துள்ளார்கள். மேலும் மாண்புமிகு பாராளூமன்ற உறுப்பினர், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அளவிலான அனைத்து துறை அலுவலர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கங்கள், குறு, சிறுமற்றும் நடுத்தர தொழில் முதலீட்டாளர்கள், வங்கி அதிகாரிகள் ஆகியோர் இம்முகாமில் பங்கேற்க உள்ளனர்.


மேலும், இம்முகாமில் தொழில்கள் துவங்க ஆர்வமுள்ள தொழில் முதலீட்டாளர்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட முதலீட்டாளர்களுகு விரைவில் தொழில் துவங்க தேவையான அனைத்து உதவிகளும் வழங்க ஆவண செய்யப்படும். எனவே தருமபுரி மாவட்டத்தில் தொழில் துவங்க ஆர்வமுள்ள அனைத்து தொழில் முனைவோர்களும் இத்தொழில் முதலீடுகள் மாநாட்டில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருமதி. கி. சாந்தி.இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad

-->