தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ”எங்கள் பள்ளி-மிளிரும் பள்ளி” என்ற திட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்களால் இன்று (04.09.2023) தொடங்கி வைக்கப்பட்டு, பள்ளி தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் செயல்பட்டு வரும் 37,574 பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி ”எங்கள் பள்ளி - மிளிரும் பள்ளி” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
”எங்கள் பள்ளி - மிளிரும் பள்ளி” என்ற செயல்திட்டத்தின் நோக்கம் பள்ளி வயது குழந்தைகள் பள்ளிப் பருவத்திலே சுத்தமான பள்ளி வளாகம் மற்றும் தன்சுத்தம், உடல்நலம், கழிவுப் பிரிப்பு மற்றும் நெகிழி இல்லா வளாகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மேலும் மாணவர்கள் தன்சுத்தம் மற்றும் கைகழுவுதல் பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ஆகும்.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான குழுவும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் வட்டார அளவிலான குழுக்களும் அமைக்கப்பட உள்ளது. பள்ளியில் பயிலும் மாணவர்களின் அருகாமையில் உள்ள குளம், ஆறு மற்றும் நீர்நிலைகளுக்கு அழைத்து சென்று இயற்கை வளங்கள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு பற்றிய முக்கியத்துவத்தையும் உணர்த்தும் விதத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
தொண்டு நிறுவனங்களின் பங்கேற்புடன் சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவர்கள் பங்கேற்க செய்தல், 20 மரக்கன்றுகள் பள்ளியில் நடப்படுதல், திடக்கழிவு மேலாண்மைக்கு 2 குப்பைத் (குழிகள்) தொட்டிகள் அமைத்தல், பள்ளி வளாகத்தில் காய்கறித்தோட்டம், மூலிகைத்தோட்டம் நடுவதற்கு நிலத்தைப் பயன்படுத்துதல், சமூகத்தின் ஒத்துழைப்பிற்கு பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துதல் செயல்பாடுகள் தேவையற்றப் பொருட்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றுதல் உள்ளடக்கிய விழிப்புணர்வு செயல்பாடுகளை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
முன்னதாக இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பள்ளித் தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழியான "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" இதில் நான் பெருமை அடைகிறேன். என் பள்ளியை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும் பொறுப்பும் என்பதனை உணர்ந்து செயல்படுவேன். பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் குப்பையினை ஏற்படுத்தமாட்டேன். மேலும், எனது சக தோழர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். பள்ளியின் தூய்மை பணிக்கு என்னை மனப்பூர்வமாக அர்பணித்துக்கொள்வேன். எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி முயற்சியில் நான் முழுமனதுடன் பங்கேற்பதுடன் எனது நண்பர்கள்.
உறவினர்கள், சுற்றத்தார் அனைவரிடமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். என்னால் இப்பணிக்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் எனது பள்ளியை தூய்மையாக வைத்திட பேருதவி செய்யும் என்பதில் உறுதியாகவுள்ளேன். மேலும், எனது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன்.” என்ற உறுதிமொழியினைவாசிக்க, பள்ளி மாணவ, மாணவியர்கள் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற ”எங்கள் பள்ளி-மிளிரும் பள்ளி” விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தார்கள். மேலும், மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பைகளை மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மூலிகை தோட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பார்வையிட்டார்கள். இந்நிகழ்வுகளின்போது, தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.கு.குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் திரு.விஜயகுமார் (இடைநிலைக்கல்வி), திருமதி.மான்விழி (தொடக்க கல்வி தருமபுரி), திரு.இளங்கோ (தொடக்க கல்வி (பொ) அரூர்), ஒருங்கிணைந்த பள்ளிகல்வி உதவி திட்ட அலுவலர்கள் திரு.ரவிக்குமார், திரு.சம்பத்குமார், சுற்றுசூழல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.வேலு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு.துரைராஜ், திரு.சுரேஷ் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
.gif)

-split%20(1).jpg)