தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், இண்டூர் உள்வட்டம், கோணங்கிஅள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (16.08.2023) நடைபெற்றது. இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 4 பயனாளிக்கு பட்டா மாறுதலையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு ரூ.24.45 இலட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகள், இந்திராகாந்தி தேசிய முதியோர்கள், தற்காலிக இயலாதோருகள், திருமணம் மற்றும் இயற்கை மரண உதவித்தொகைகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 32 பயனாளிகளுக்கு 19.20 இலட்சம் மதிப்பீட்டில் இ-பட்டாகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 24 பயனாளிகளுக்கு 14.40 இலட்சம் மதிப்பீட்டில் இ-பட்டாகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1.34 இலட்சம் மதிப்பீட்டில் விசை தெளிப்பான், துவரை நாற்றுகள், சொட்டுநீர் பாசன கருவி உள்ளிட்ட வேளாண் உதவிகளையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.85,000/- மதிப்பீட்டில் பவர் டிரில்லர் கருவிகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1.90 இலட்சம் மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசன கருவிகளையும், தக்காளி, மிளகாய், கொய்யா நாற்றுகளையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் 25 விவசாயிகளுக்கு ரூ.12.91 இலட்சம் கடன் உதவிகளைவும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.1.72 இலட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரணம், திருமண உதவி, ஒய்வூதியம் உள்ளிட்ட உதவித்தொகைகளையும், மகளிர் திட்டம் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகளைவும் என மொத்தம் 126 பயனாளிகளுக்கு ரூ. 80,27,622/- (ரூ.80.28 இலட்சம்) மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள். இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் தொடர்பு திட்ட முகாமானது மிகவும் பின்தங்கிய மற்றும் மலைவாழ் மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளை தேர்வு செய்து அத்தகைய பகுதிகளில் அரசின் அனைத்து துறையினுடைய அலுவலர்களையும் அழைத்துச் சென்று, அரசு திட்டங்களை எடுத்துரைத்து, அங்குள்ள பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய வேண்டுமென்றும், பெரியவர்களுக்கும், பெண்களுக்கும், தாய்மார்களுக்கும், பொது மக்களுக்கும், நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துக்கூறும் விதமாகவும் இந்த முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்றைய தினம் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், இண்டூர் உள்வட்டம், கோணங்கிஅள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இண்டூர் உள்வட்டத்தில் 12 குக்கிராமங்களை உள்ளடக்கியது. இப்பகுதி மக்கள் பயன்பெறும் வேண்டும் என்ற நோக்கிலும், மக்களின் சிரமங்களை போக்கும் வகையிலும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இப்பகுதியில் நடைபெறுகின்றது. விவசாயம் மற்றும் புதிய வேளாண் கருவிகள் தொடர்பான அரசின் திட்டங்களை செய்தித்தாள்கள் மற்றும் வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு அரசால் வேளாண்மை துறைக்கென செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைவாக தெரிந்துகொள்ளும் வகையில் அரசால் உழவன் செயலி அறிமுகம் செய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
இச்செயலி மூலம் வேளாண் பொருட்களின் விலை நிலவரங்கள், வேளாண் துறை சார்ந்த அலுவலர்களின் தொடர்பு எண்கள், வானிலை நிலவரங்கள், தமிழ்நாடு அரசின் வேளாண் துறை சார்ந்த திட்டங்கள், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை விவசாயிகள் தெரிந்துகொள்ளலாம். மேலும் கால்நடை பராமரிப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட தொழில்மையம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் துறை அலுவலர்கள் தங்களின் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்துள்ளனர். எனவே பொதுமக்களாகிய நீங்கள் அரசால் செயல்படுத்தப்படக்கூடிய அனைத்து திட்டங்களையும் முழுமையாக தெரிந்துகொண்டு, விண்ணப்பித்து பயனடைய வேண்டும்.
இன்றைய தினம் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு முன்கூட்டியே மனுக்கள் பெறுவது தொடர்பாக இப்பகுதி சுற்றுவட்டார கிராமங்களில் விழிப்புணர்வு செய்யப்பட்டு, வருவாய்துறை மற்றும் பிறத்துறை சார்ந்த அலுவலர்கள் முன்பாகவே இங்கு வருகைதந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதி வாய்ந்த, உரிய கோரிக்கைள் ஏற்கப்பட்டு இன்றைய தினம் சுமார் ரூபாய் 80.28 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் இந்த மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கை மனுக்களும் மற்றும் ஏற்கெனவே பரிசீலனையில் உள்ள மனுக்களும் உரிய முறையில் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படும். அரசு மக்களின் உயர்வுக்காக திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை பொதுமக்களும் முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.டி.கே.கீதாராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி நசீர் இக்பால், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி.க.விஜயா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு. கார்த்திகை வாசன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு. மாது, திட்ட அலுவலர் பழங்குடியினர் நலன் திரு. பி.எஸ்.கண்ணன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் திருமதி. பாத்திமா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி.மு.சரஸ்வதி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி பெ.மகேஸ்வரி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத்தலைவர் திருமதி.பெ.ராஜேஸ்வரி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் திருமதி. எம்.தனலட்சுமி, கோணங்கிஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி பா.அலமேலு, கோணங்கிஅள்ளி ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் திருமதி.ப.சித்ரா, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அனைத்து துறை மாவட்ட அளவிலான முதல் நிலை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.