Type Here to Get Search Results !

கடத்தூரில், குளிர்பானம் மற்றும் பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு.


தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி., ஐ.ஏ.எஸ்., இரு தினங்களுக்கு முன் குளிர்பானம், குடிநீர் சுத்திகரிப்பு கேன்கள் மற்றும் பழக்கடை விற்பனையாளர்கள் மற்றும் மொத்த விற்பனை  வணிகர்களுக்கு, வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில் வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ஏ.பானுசுஜாதா,  அவர்கள் மேற்பார்வையில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர், கடத்தூரில் கடத்தூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், அரூர் மெயின் ரோடு, தர்மபுரி மெயின் ரோடு, பொம்மிடி மெயின் ரோடு மற்றும் சில்லாரள்ளி  பகுதிகளில் உள்ள குளிர்பான கடைகள், பழக்கடைகள், பேக்கரிகள் மற்றும்  குளிர்பானம் மொத்த விற்பனை நிலையங்களில் ஆய்வு நடத்தினர்.


ஆய்வின் போது வணிகர்கள் வழிகாட்டு நெறிமுறைகள் படி பானங்கள் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருள்கள் தரமானதாகவும், உரிய காலாவதி தேதி உள்ள பொருள்களாக உள்ளதா, குடிநீர் பாட்டில்கள், கேன்கள், உரிய தரச் சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று தயாரிப்பு தேதி முடிவு தேதி  அச்சிடப்பட்டுள்ளதா  என்றும் பழச்சாறு குளிர்பானங்கள் தயாரிக்கும் பழ வகைகள் தரமானதாகவும், புதியதாகவும் முறையாக நீரால் கழுவி, பாதுகாக்கப்பட்ட குடிநீரால் தயாரிக்கிறார்களா என கண்காணிக்கப்பட்டது. அழுகிய பழங்களையோ, செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்வதோ கூடாது என எச்சரிக்கப்பட்டது.  

உபயோகப்படுத்தும் உபகரணங்கள் மிக்சி, பிழிப்பான் மற்றும் பாத்திரங்கள் போன்றவை அவ்வப்போது சுத்தம் செய்தலுடன், பணியாளர்களும் தன் சுத்தம் பராமரித்தல் வேண்டும் என விழிப்புணர்வு செய்யப்பட்டது. இனிப்பு சுவை கூட்டவோ, பழங்கள் சீக்கிரம் பழுக்க செய்ய தேவையற்ற வேதிப்பொருளை உபயோகப்படுத்தக் கூடாது  எனவும் பழரசங்கள் மற்றும் குளிர்பானங்களுக்கு பயன்படுத்தும் ஐஸ்கட்டிகள் பாதுகாப்பான குடிநீரால் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும் எனவும், பூச்சிகள் மற்றும் ஈக்கள் மொய்க்காமல் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள விழிப்புணர்வு செய்தனர். 


மேலும் அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம்  சான்றிதழ் பெற்று இருத்தல் அவசியம் எனவும் எடுக்காத, புதுப்பிக்காதவர்கள் உடனடியாக உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று அதை நுகர்வோர் காணும் வகையில் கடைகளில் மாட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.


நேற்றைய ஆய்வில் இரண்டு கடைகளில் இருந்து தரமற்ற அழுகிய பழங்கள்  பறிமுதல் செய்து  அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் ஒரு கடையில் உரிய தேதி அச்சிடாத குளிர்பானங்கள் , சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேற்படி மூன்று கடைகளுக்கும் உடனடி அபராதம் தலா ரூபாய்.ஆயிரம் வீதம் ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.


ஒரு மொத்த விற்பனை நிலையத்தில் குளிர்பானம் தரமறிய உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பகுப்பாய்வு அறிக்கை அடிப்படையில் மேற் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. நுகர்வோரும் தாங்கள் வாங்கும் பொருள்கள் குளிர்பானங்கள் தரமானதாகவும், தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள், சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் கேன்கள் உரிய தயாரிப்பு தேதி, முடிவு தேதி, தயாரிப்பு முகவரி, உணவு பாதுகாப்பு உரிம எண் உள்ளனவா என்பதை கண்காணித்து பயன்படுத்த கேட்டுக் கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies