தருமபுரியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!! என்ற கருப்பொருளை மையமாக கொண்ட மருத்துவம் மற்றும் சமூக நலத்துறை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (19.12.2022) தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது: மருத்துவம் மற்றும் சமூக நலத்துறை தொடர்பான இந்த விழிப்புணர்வு கருத்தரங்கினை இன்று தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இங்கு வருகை தந்துள்ள அனைத்து மருத்துவத் துறை அலுவலர்களுக்கும், மருத்துவர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
தருமபுரி மாவட்டம் அரசின் பல்வேறு குறியீடுகளில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்பொழுது பின்தங்கிய மாவட்டமாக இருந்த நிலையில் தற்பொழுது அனைவரின் முயற்சியின் காரணமாக வளர்ந்து வரும் மாவட்டமாக திகழ்ந்து வருகின்றது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் முக்கியமாக இருந்தாலும், மனிதவளம் குறியீடுகள் மேம்பாடு அடையும் போதே ஒருநாட்டின் உண்மையாக வளர்ச்சியாக கருதப்படுகிறது.
தருமபுரி மாவட்டம் தற்பொழுது வளர்ச்சி அடைந்து வந்தாலும், மருத்துவம் மற்றும் சுகாதார குறியீடுகளை பார்க்கும் போது குழந்தை இறப்பு விகிதம், பிரசவத்தின்போது தாய்மார்கள் இறப்பு விகிதம் உள்ளிட்ட சில குறியீடுகளில் பின்தங்கிய நிலையில் உள்ளதால் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இக்குறியீடுகளை முன்னேற்றம் அடைய செய்திட வேண்டியது நமது அனைவரின் கடைமையாகும்.
இதில் குறிப்பாக, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் ஒத்துழைப்பின் மூலம் இக்குறியீடுகளை மேம்படுத்திட முடியும். இக்குறியீடுகளை மேம்படுத்திட தமிழக அரசு மருத்துவத்துறையின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து நிலைகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் இக்குறியீடுகளில் முன்னேற்றம் ஏற்படும்.
தருமபுரி மாவட்டத்தில் பெண்குழந்தைகளின் பாலின விகிதம் குறைவாக உள்ளது. பச்சிளம் குழந்தைகளின் இறப்பினை தடுத்திட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் குழந்தைகள் நல மருத்துவர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளில் குறைபாடுள்ள குழந்தைகளை தேவைப்படின் உயர் சிகிச்சைக்காக பரிந்துரை செய்ய வேண்டும். அனைத்து பிரசவங்களும் மருத்துவராலும், மருத்துவரின் கண்காணிப்பில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு குறித்தும், தாய்ப்பாலின் அவசியம் குறித்து தாய்மார்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மருத்துவர்கள் கருத்தரித்துள்ள தாய்மார்களுக்கு குடும்ப கட்டுபாடு முறையின் அவசியத்தை எடுத்துக்கூறி உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.
மேலும், மருத்துவத்துறை, சமூக நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகிய 3 துறைகளும் ஒருங்கிணைந்து தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்களை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் பெண் பாலின விகிதத்தை அதிகரிப்பதோடு, பள்ளி இடைநிற்றல் விகிதத்தையும் குறைக்க முடியும்.
தருமபுரி மாவட்டத்தில் ஸ்கேன் கருவியின் உதவியுடன் கருவின் பாலினத்தை தெரிவிக்கும் ஸ்கேன் மையங்கள், பாலினத்தை அறிந்து கருக்கலைப்பு செய்யும் மருத்துவமனைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் அனைவரும் தங்களுக்கு உள்ள பொறுப்புகளையும், சமூக கடமைகளையும் அறிந்து தருமபுரி மாவட்டம் மருத்துவம் மற்றும் சுகாதார குறியீட்டில் முன்னேற்றம் அடைய ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் பேசினார்கள்.
இக்கருத்தரங்கில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர், மரு.ம. சாந்தி, அரசு தருமபுரி மருத்துவக்கல்லுரி மருத்துவமனை முதல்வர் மரு.க.அமுதவல்லி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.ச.சௌண்டம்மாள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மகப்பேறு தலைமை மருத்துவர் மரு. மலர்விழி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.ஜான்சிராணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

.gif)


