தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 638 மனுக்கள் வரப்பெற்றன.
அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.
அதனை தொடர்ந்து, தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட கோணங்கிநாயக்கனஅள்ளி, வெள்ளோலை, அக்கமனஅள்ளி, மானியதஅள்ளி, சாமிசெட்டிப்பட்டி பகுதியிலுள்ள மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமம்) திட்டத்தின் கீழ் வீடுகட்ட அனுமதி வழங்கி இதுநாள் வரை பணி துவங்காமல் இருந்த 5 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.50,000/-க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
மேலும், கம்பைநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ராஜஆறுமுகம் அவர்கள் எதிர்பாராதவிதமாக பணியிடையில் மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது வாரிசுதாரரும் மனைவியுமான பேச்சியம்மாள் என்பவருக்கு பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி.வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி. வி.கே.சாந்தி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.கண்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு. வி. இராஜசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.கவிதா, பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் திரு.யு.ரமேஷ்குமார் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.

.gif)

