வத்தல்மலைக்கு கொண்டை ஊசி வளைவுகள் வழியாக பஸ் சோதனை ஓட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

வத்தல்மலைக்கு கொண்டை ஊசி வளைவுகள் வழியாக பஸ் சோதனை ஓட்டம்.

தருமபுரி மாவட்டத்தில் குளிர்ச்சியான பகுதியாகவும் ஏழைகளுக்கு மினி ஊட்டியாகவும் திகழும் வகையில் வத்தல் மலை அமைந்துள்ளது. வத்தல் மலையில் காப்பி, மிளகு, நெல், ராகி, கடுகு, சாமை, வரகு மற்றும் பலாப்பழம் உள்ளிட்டவை விளைவிக்கப்படுகின்றன. இப்பகுதி பொதுமக்கள் பெருமளவு விவசாயத்தை நம்பி இருப்பதால் விளைகின்ற பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், மேலும் பள்ளி, மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வருவதற்கும் வத்தல் மலைப்பகுதியில் இருந்து 8 கிலோமீட்டர் தாண்டி அடிவாரப் பகுதிக்கு வந்து தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி பகுதிகளை சென்றடைய வேண்டிய சூழல் உள்ளது.

இந்த மலைப்பகுதிக்கு ஏற்கனவே சாலை அமைக்கப்பட்டு பேருந்தும் இயக்கப்பட்டது. தொடர் மழை காரணங்களால் சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை பலத்த சேதம் அடைந்ததின் காரணமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது. 

அதனைத் தொடர்ந்து மீண்டும் தார் சாலை புதுப்பிக்கும் பணி தொடங்கபட்டு பழுதடைந்த பாலங்கள் சாலை சீரமைக்கப்பட்டு பேருந்து சேவைக்காக சாலை முழு வீச்சில் தயார் செய்யப்பட்டது. இருப்பினும் பேருந்து சேவை தொடங்கப்படாமல் இருந்தது. அதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் தொடர்ந்து பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழாவிற்கு வந்திருந்த வேளாண் மற்றும் உழவன் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் வத்தல்மலைக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி வரும் 13-ந் தேதி பேருந்து வசதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. நேற்று வத்தல் மலைப்பகுதிக்கு கொண்டை ஊசி வளைவுகள் வழியாக பேருந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. 

இதனால் பால்சிலம்பு, பெரியூர், சின்னாங்காடு, ஒன்றியங்காடு, நாயக்கனூர், வத்தல்மலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad