தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் சிறு குறு விவசாயிகள் பயனடையும் வகையில் 2021-2022-ம் ஆண்டு கூட்டுப் பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்ட வேளாண்மைத் துறையின் மூலம் 8 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் 100 சிறு குறு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்ட வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத் துறையின் சார்பில் மொத்தம் 11 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.55.00 இலட்சம் அரசு அடிப்படை தொகுப்பு நிதியுடன் ரூ.10.91 இலட்சம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் பங்களிப்புடன் ரூ.65.91 இலட்சம் மதிப்பீட்டில் டிராக்டர், புல் நறுக்கும் கருவி, களை எடுக்கும் கருவி, துளையிடும் கருவி, பவர் டிரில்லர், ரோட்டவேடர், விசை தெளிப்பான் உள்ளிட்ட 7 வகையான வேளாண் கருவிகள் அடங்கிய வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
இந்த உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் கொள்முதல் செய்த வேளாண் கருவிகளை குழு உறுப்பினர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டு, இக்குத்தகைத் தொகையினை பயன்படுத்தி இந்த குழுக்கள் கூடுதல் வேளாண் கருவிகளையும் வாங்கி பயன்படுத்தலாம் அல்லது அக்குழுவிற்கான சுழல் நிதியாகவும் இக்குத்தகை தொகையினை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திருமதி .வசந்தரேகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.மோகன்தாஸ் சௌமியன், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் திரு.குணசேகரன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் திருமதி. கோ.மாலினி, உதவி இயக்குநர் செல்வி.சி.சசிகலா, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் திருமதி. தேன்மொழி, திருமதி.சித்ரா, திருமதி. இளவரசி, திரு.இளங்கோவன், திரு.சுப்பிரமணியன், திரு.மோகன், வேளாண்மை அலுவலர்கள் திரு. அன்பரசு, திருமதி.ராஜேஸ்வரி, தோட்டக்கலை அலுவலர் திரு.கணேஷ், துணை தோட்டக்கலை அலுவலர் திரு. குமார் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.