Type Here to Get Search Results !

கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் வட்டார அளவிலான சுகாதார திருவிழா.

தருமபுரி மாவட்டம், அரூரி வட்டம், தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் தருமபுரி மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் வட்டார அளவிலான சுகாதார திருவிழாவின் மாபெரும் மருத்துவ முகாம் துவக்க விழா இன்று (18.04.2022) நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தலைமை வகித்தார்.

இவ்விழாவில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.செந்தில்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார். இவ்வட்டார அளவிலான மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் துவக்கி வைத்து, பார்வையிட்டு பேசும்போது தெரிவித்ததாவது: மாண்மிபுமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களின் ஆரோக்கியத்தை காக்கவும், அவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று மருத்துவ உதவி செய்கின்ற வகையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்து, அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட ஆணையிட்டதை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் வட்டாரத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு, மக்களைத் தேடி சிறப்பான மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. 

மேலும், மக்களுக்கு பயன்தருகின்ற வகையில் தற்போது கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் வட்டார அளவிலான சுகாதார திருவிழா அனைத்து வட்டாரங்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டு இன்றைய தினம் அரூர் வட்டாரத்திற்குட்பட்ட தீர்த்தமலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் துவக்கி வைக்கபட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய வசிக்கும் இடத்திலேயே வட்டாரத்திற்கு ஒரு முகாம் வீதம் சுகாதார திருவிழா நடத்தப்படுகின்றது. சாதாரண நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலம் வழங்கப்படுகிறது. 

மேலும், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்றவைகளுக்கான சிகிச்சை
பெற போதுமான வசதிகள் அருகாமையில் கிடைப்பதில்லை. எனவே வட்டாரந்தோறும் நடைபெறுகின்ற கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் வட்டார அளவிலான சுகாதார திருவிழா - மருத்துவ முகாம்களின் மூலம் கிராம புற மக்களுக்கு குறிப்பாக தொலைதூரத்தில் வசிக்கும் கிராமபுற மக்களுக்கு தாய் சேய் நலம் (Obstetrics & Pediatrics), தொற்றாநோய்களுக்கான சிறப்பு பொது மருத்துவம் (சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்கள்), அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பு முறிவு பிரிவு, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் நோய் சிகிச்சை மருத்துவம், புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மருத்துவம், மனநல மருத்துவம், இந்தியமுறை மருத்துவம், ICTC சேவைகள், வயது முதிர்ச்சியினால் ஏற்படும் நோய்கள் மக்கள் போன்றவைக்கு சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மேல் சிகிச்சைக்கு உயர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்பட்டு, தொடர் சிகிச்சைகள் அளிக்கப்படும். 


மேலும், அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு பரிந்துரை செய்யப்படுகிறார்கள். இம்முகாமின் வாயிலாக அதிநவீன பரிசோதனை சாதன வசதிகள் கிராம மக்களுக்கு கிடைக்க செய்தல், நோய் கண்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தல், பரிந்துரை மற்றும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல், சுகாதார விழிப்புணர்வு கல்வி வாயிலாக மக்கள் நல்வாழ்வை மேம்படுத்துதல் ஆகிய சிறப்பு அம்சங்களை கொண்டு மக்களுக்கு தேவையான பரிசோதனைகளும், சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.

இம்முகாம் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும்
அடிப்படை மருத்துவ பரிசோதனை மற்றும் தேவையான இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இம்முகாமில் தனியாக தடுப்பூசி பிரிவு ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசிகளும் செலுத்தப்படுகின்றன. இவ்வட்டார அளவிலான சுகாதார திருவிழா /கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறும். 

வட்டார அளவிலான சுகாதார திருவிழா / கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் ஒரு வட்டாரத்திற்கு ஒரு முகாம் வீதம் சுகாதாரத் துறையின் 8 வட்டாரங்களிலும் மொத்தம் 8 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. முகாமின் போது சித்த மருத்துவம், பல்துறை கண்காட்சி மற்றும் மாண்புமிகு முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட விளக்க கண்காட்சி மற்றும் வழிகாட்டுதல் மையம் செயல்படும்.

மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலேயே இம்முகாம்கள் நடைபெறுவதால் ஆரம்ப நிலையிலேயே மக்கள் தங்களது உடல் நலம் குறித்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு, தங்களுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் அந்நோய்களுக்கான தகுந்த சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்கு இம்முகாம்கள் ஏதுவாக இருக்கும். மக்களின் ஆரோக்கியத்தை காத்திடவும்,
நோய் வருமுன் காப்பதே சிறந்தது என்பதையும் கருத்தில் கொண்டு மக்களுக்கான பல்வேறு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் இம்முகாம்களில் தங்களை பரிசோதனை செய்து கொண்டு, பொதுமக்கள் உடல்நலத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக, மாண்புமிகு தமிழக முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ். தீர்த்த மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வரும் ஏ.கௌதமி என்ற மாணவிக்கு கண் கண்ணாடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.முத்தையன், துணை
இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ச.சவுண்டம்மாள், அரூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.பி.பொன்மலர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் திருமதி.எஸ்.சரளா, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி.ஆர்.புஷ்பலதா, தீர்த்தமலை ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.ஆர்.கலைவாணி, அரூரி வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஆர்.தொல்காப்பியன், அரூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.மணிவண்ணன், திரு. இரவிச்சந்திரன் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies