தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் தங்களுக்கு நேரிடும் பிரச்சனைகள் மற்றும் குறைகளைத் தெரிவித்து உதவிகள் பெற 14567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
முதியோர்களின் அனைத்து குறைகளை தெரிவிப்பதற்கு தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து உதவி எண்ணை அறிவித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007 செயல்படுத்தப்பட்டு அதற்கேற்ப விதிகளும் வகுக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. முதியோர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு மத்திய சமூக நீதி அமைச்சகம் இந்தியாவில் பல மாநிலங்களில் கட்டணமில்லா அழைப்பு மையங்களைத் தொடங்கியுள்ளது.
முதியோர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு தமிழ்நாட்டில் 2021 ஏப்ரல் 28 ஆம் தேதி முதல், கட்டணமில்லா உதவி எண்:14567 வசதி தொடங்கப்பட்டுள்ளது.
முதியோர் ஹெல்ப்லைன் மூலமாக வழங்கப்படும் சேவைகள் பின்வருமாறு:
- முதியோர் இல்லங்கள், பராமரிப்பு மையம், பராமரிப்பாளர்கள், மருத்துவ ஆலோசனை வழங்கும் இடங்கள், வலி நிவாரண மையங்கள் குறித்து முதியோர்களுக்கு தேவைப்படும் தகவல்கள்.
- அரசு திட்டங்களை பெறும் வழிமுறைகள், சட்ட வழிகாட்டுதல்கள், பராமரிப்பு சட்டம் குறித்த வழிகாட்டுதல்கள்.
- மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை மற்றும் ஆதரவு.
- ஆதரவற்ற இடரில் உள்ள முதியோர் மீட்பு, குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிறரால் துன்புறுத்தப்படும் முதியோர்களுக்கு ஆதரவு அளித்து பிரச்சனைகளை தீர்க்க வழிகாட்டுதல் போன்ற சேவைகள் வழங்கப்படும்.
உதவி மையம் அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.
உதவி எண் : 14567 எனவே, மூத்த குடிமக்கள் தங்களுக்கு நேரிடும் பிரச்சனைகள் மற்றும் குறைகளைத் தெரிவித்து உதவிகள் பெற 14567 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயனடைலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.