மாணவ -மாணவிகளின் நலன் கருதி 9, 10, 11, 12 வகுப்புகளுக்காக பள்ளிகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட தனியார் பள்ளி சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க சிறப்பு பொதுக்குழு ஆலோசனை கூட்டம் தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவரும், தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளருமான டி.என்.சி. இளங்கோவன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயல் தலைவர் சி.சக்திவேல் வரவேற்றார். சங்க பொருளாளர் ஆர். நடராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்திலிருந்து பல்வேறு தனியார் பள்ளி தாளாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தனியார் பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின் படி கல்வி கட்டணத்தை மாணவ-மாணவிகளிடம் வசூலிக்க வேண்டும். இதற்கு மாணவ - மாணவிகளின் பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகள் அந்த பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் இல்லாமலேயே வேறு பள்ளியில் சேர்ந்து கொள்ளலாம். மாற்றுச் சான்றிதழ் கொடுப்பதற்கு எந்த தடையும் விதிக்க கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாற்றுச் சான்றிதழ் வழங்குவதற்கு பள்ளியின் நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் வேறு பள்ளியில் சேர்க்க அனுமதி வழங்கக்கூடாது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடிக்கிடக்கும் நிலையில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 9 ,10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்த வேண்டும். மாணவ- மாணவிகளின் நலன் கருதி பள்ளிகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும்.மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வாகனங்களுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜ்ஜீ, ஸ்டான்லி முருகேசன், வேடியப்பன், விஜய் சங்கரன், செல்வராஜ், சென்ன கேசவன், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.