Hollywood Movies

Breaking News

புத்த, சமண, சீக்கிய மதத்தினருக்கு ஆன்மிகப் பயணம் செல்ல தமிழக அரசு நிதியுதவி! 120 பேருக்கு தலா ரூ.10,000!


50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர், 20 சீக்கிய மதத்தினர் பயன்பெறலாம் – விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 31, 2027!

தருமபுரி, நவம்பர் 17:

தமிழ்நாட்டைச் சேர்ந்த புத்த மதத்தினர், சமண மதத்தினர் மற்றும் சீக்கிய மதத்தினர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தங்களது மத வழிபாட்டுத் தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் புத்த மதத்தினர் 50 பேர், சமண மதத்தினர் 50 பேர், சீக்கிய மதத்தினர் 20 பேர் என மொத்தம் 120 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.12 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

புனிதத் தலங்களுக்கான ஆன்மிகப் பயணம்!

புத்த மதத்தினர்: பீகாரில் உள்ள புத்த கயா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள குஷிநகர், வாரணாசியில் உள்ள சாரநாத், பீகாரில் உள்ள ராஜ்கிர் மற்றும் நேபாளத்தில் உள்ள லும்பினி உள்ளிட்ட புனிதத் தலங்களுக்குப் பயணம் மேற்கொள்ளலாம்.

சமண மதத்தினர்: ராஜஸ்தானில் உள்ள தில்வாரா கோயில், ரணக்பூர் சமணக் கோயில், ஜெய்சால்மர் சமணக் கோயில், ஜார்க்கண்டில் உள்ள சிகர்ஜி, குஜராத்தில் உள்ள பாலிதானா, பீகாரில் உள்ள பாவாபுரி சமணக் கோயில் மற்றும் கர்நாடகாவில் உள்ள சிரவணபெலகொளா உள்ளிட்ட புனிதத் தலங்களுக்குப் பயணம் மேற்கொள்ளலாம்.

சீக்கிய மதத்தினர்: பஞ்சாப், டெல்லி, பீகார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சீக்கியர்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்குப் பயணம் மேற்கொள்ளலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் தங்களது மாவட்டத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரியக் கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை – 600005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2027

எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Copying is disabled on this page!