நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை முடக்குவதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்! நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்!
ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நிதி வழங்கக் கோரிக்கை – பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்ப்பாட்டம்!
தருமபுரி:
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்குவதைக் கண்டித்தும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் பகுதி குழு செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். கிளை செயலாளர்கள் ராஜசேகர், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினரும் பேரூராட்சி கவுன்சிலருமான விஸ்வநாதன், ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் சின்னசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் டி.ஆர். சின்னசாமி, பகுதி குழு உறுப்பினர்கள் சின்னராஜி, அன்பரசு, மனோண்மணி, அஞ்சலி உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். பகுதி குழு உறுப்பினர் சிலம்பரசன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:
16-ஆவது நிதி ஆணையப் பரிந்துரையின்படி நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.
மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதியை நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு மாநில அரசு வழங்க வேண்டும்.
நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள ஒப்பந்தப் பணிகளை விரைவுபடுத்தி செயல்படுத்த வேண்டும்.
துப்புரவு மற்றும் தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
மழைக்கால முன்னெச்சரிக்கை மற்றும் பராமரிப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளை முடக்கி, உள்ளாட்சி நிர்வாகத்தின் நிதி அதிகாரத்தையும் சுயாட்சியையும் பாதிக்கும் வகையில் மாநில அரசு செயல்படுவதாகக் கண்டனம் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.


கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக