பிக்கிலி ஊராட்சியில் ஆட்சியர் வே.சரவணன் திடீர் ஆய்வு! அரசு மருத்துவமனை, ரேஷன் கடை, அங்கன்வாடி மையத்தில் ஆய்வு!
குடிநீர், மின்சாரம், சுகாதார வசதிகள் குறித்து ஆய்வு – ஊட்டச்சத்து குறைவுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்!
தருமபுரி, நவம்பர் 19:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பிக்கிலி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூட்டுறவு நியாய விலைக்கடை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, திறந்தவெளிக் கிணறு, அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், இ.ஆ.ப., இன்று (19.11.2026) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு!
பிக்கிலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம், மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் பதிவேடுகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசரகாலப் பிரிவு, இயன்முறை சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு, பொது மருத்துவம், பெண்கள் நலப் பிரிவு, மயக்கவியல் பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
மேலும், விஷமுறிவு சிகிச்சைக்கான மருந்துகளின் இருப்பு மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவமனையைத் தூய்மையாகப் பராமரிப்பதுடன், குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நோயாளிகளுக்கு முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
ரேஷன் கடையில் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு!
இதனைத் தொடர்ந்து, பிக்கிலி ஊராட்சியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பார்வையிட்டு, அவற்றின் தரம் குறித்து கடைப் பணியாளரிடம் கேட்டறிந்தார்.
குறவன் தின்னை பகுதியில் அடிப்படை வசதிகள் ஆய்வு!
பிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்ட குறவன் தின்னை பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குடியிருப்புகளுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், அப்பகுதியில் குடிநீர் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாகக் கிடைக்கிறதா எனக் கேட்டறிந்தார்.
மேலும், குறவன் தின்னையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஜீவா நகரில் உள்ள திறந்தவெளிக் கிணறு ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து ஆய்வு!
குறவன் தின்னை அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மையத்தின் பதிவேடுகள், குழந்தைகளின் தினசரி வருகை எண்ணிக்கை, கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவு மற்றும் முட்டைகளின் இருப்பு விவரங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.
குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் மதிய உணவின் தரம், சுகாதாரம், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள், மையக் கட்டடத்தின் உறுதித்தன்மை ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, குழந்தைகளுக்கு வழங்கப்படும் முன்பருவக் கல்விக்கான கற்றல் உபகரணங்கள், விளையாட்டுகள் மூலம் பாடம் கற்பிக்கும் முறை மற்றும் குழந்தைகளின் வயதுக்கேற்ற உயரம், எடை கண்காணிப்பு அட்டவணை ஆகியவற்றைப் பார்வையிட்டார்.
எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தனிக் கவனம் செலுத்தி, அவர்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நீலமேகம், சுருளிநாதன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

%20(2).jpg)
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக