Hollywood Movies

Breaking News

தருமபுரியில் 353 பட்டுப்புழு விவசாயிகளுக்கு ரூ.7.91 கோடி அரசு மானிய உதவி!


எல்-நினோ காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் – 2031-க்குள் தமிழக வெண்பட்டு உற்பத்தியை 4,500 மெட்ரிக் டன்னாக உயர்த்த இலக்கு!

தருமபுரி: தருமபுரி மாவட்டம், சோகத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தில், பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 353 பட்டுப்புழு விவசாயிகளுக்கு ரூ.7 கோடியே 91 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பட்டுப்புழு வளர்ப்பில் எல்-நினோ காலநிலை நிகழ்வின் தாக்கம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் அரசுச் செயலர் ஆர். லில்லி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர் ரெ. சதீஸ் மற்றும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பட்டுப்புழு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசின் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் சில்க் சமக்ரா திட்டத்தின் கீழ், ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, பென்னாகரம், வாணியம்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை, ஈரோடு, தாளவாடி, திருச்சி, நாமக்கல், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 353 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.7.91 கோடி மதிப்பிலான மானிய உதவிகளை அரசுச் செயலர் ஆர். லில்லி வழங்கினார்.

மல்பெரி நடவு, தனிப்பட்ட பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைத்தல், பட்டுப்புழு வளர்ப்புக்குத் தேவையான தளவாடங்கள், நோய்த்தடுப்பு மருந்துகள் மற்றும் கிருமிநாசினிகள் வழங்குதல், பட்டுவளர்ப்பு தொடர்பான பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் இந்த மானிய உதவிகள் வழங்கப்பட்டன. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன், விவசாயிகளின் வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதே இத்திட்டங்களின் நோக்கமாகும்.

நிகழ்ச்சியில் பேசிய அரசுச் செயலர் ஆர். லில்லி, தமிழகத்தின் கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியிலும் விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிலும் பட்டுவளர்ப்புத் தொழில் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார். விவசாயம், தொழில்முனைவு மற்றும் கைத்தொழில் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இத்தொழில், குறிப்பாக கிராமப்புற பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறு விவசாயிகளின் பொருளாதாரப் பங்களிப்பை அதிகரிக்க உதவுவதாகவும் குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றம், வெப்பநிலை உயர்வு, மழைப்பொழிவு மாற்றம் மற்றும் நீர்வளப் பற்றாக்குறை ஆகியவை பட்டுவளர்ப்புத் தொழிலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக எல்-நினோ போன்ற காலநிலை நிகழ்வுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து எதிர்கொள்ள விவசாயிகளுக்கு அறிவியல் அடிப்படையிலான விழிப்புணர்வு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், 2025–2026-ஆம் ஆண்டில் இந்தியாவின் வெண்பட்டு உற்பத்தியில் சுமார் 30 சதவீதம், அதாவது 3,074 மெட்ரிக் டன் வெண்பட்டு தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 2026 அக்டோபர் 31-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 40,684 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 20,953 விவசாயக் குடும்பங்கள் பட்டுவளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.

தற்போது ஆண்டுக்கு சுமார் 3,000 மெட்ரிக் டன்னாக உள்ள தமிழகத்தின் வெண்பட்டு உற்பத்தியை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், அதாவது 2031-ஆம் ஆண்டிற்குள் 4,500 மெட்ரிக் டன்னாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு பட்டு வளர்ச்சித்துறை செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் தமிழகத்தின் முக்கியமான பட்டுத்தொழில் மையங்களில் ஒன்றாக விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், இம்மாவட்டத்தில் 2,359 விவசாயிகள் மல்பெரி சாகுபடி மற்றும் பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு அங்காடி தருமபுரி மாவட்டத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் ரூ.19.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, நவம்பர் 4-ஆம் தேதி முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த அங்காடி மூலம் விவசாயிகள் தங்களது பட்டுக்கூடுகளை வெளிப்படையான ஏல முறையில் விற்பனை செய்து உரிய சந்தை விலையைப் பெறுவதற்கான வாய்ப்பு மேம்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பட்டுப்புழு வளர்ப்பில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிப்பதால், அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் பட்டுப்புழுக்களின் வளர்ச்சி, நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் பட்டுக்கூடுகளின் தரத்தைப் பாதிக்கக்கூடும். இதனால், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைச் சீராகப் பராமரித்தல், மல்பெரித் தோட்டங்களில் நீர் மேலாண்மை மற்றும் மண் ஈரப்பதத்தைப் பாதுகாத்தல், வளர்ப்பு மனைகளில் சுகாதார மேலாண்மை மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற எல்-நினோ குறித்த விழிப்புணர்வு மற்றும் அறிவுப் பகிர்வுக் கூட்டத்தில், மத்திய பட்டு வாரியத்தின் தருமபுரி பட்டு முட்டை உற்பத்தி மைய விஞ்ஞானி-டி முனைவர் சி. செல்வராஜ், பட்டுப்புழு வளர்ப்பில் எல்-நினோவின் தாக்கம் குறித்து விளக்கினார். மத்திய பட்டு வாரியத்தின் உடுமலைப்பேட்டை ஆராய்ச்சி விரிவாக்க மைய விஞ்ஞானி-சி முனைவர் எஸ். மோகன்ராஜ், மல்பெரித் தோட்டப் பராமரிப்பில் எல்-நினோவால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விளக்கங்களை வழங்கினார்.

இதற்கு முன்னதாக, பட்டுத்தொழில் தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அரசுச் செயலர் ஆர். லில்லி, பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர் ரெ. சதீஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தா. பரிதா பானு, பட்டு வளர்ச்சித்துறை இணை இயக்குநர் செ. பொன்மாரி, தருமபுரி பட்டு வளர்ச்சித்துறை மண்டல இணை இயக்குநர் இளையராஜா, உதவி இயக்குநர் சி. கஸ்தூரி, பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்கள், மத்திய பட்டு வாரிய விஞ்ஞானிகள் மற்றும் பட்டுப்புழு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அரசின் மானிய உதவிகள், தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு மூலம் பட்டுவளர்ப்புத் தொழிலை நவீனமயமாக்கி, விவசாயிகளின் உற்பத்தித் திறன் மற்றும் வருமானத்தை உயர்த்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

கருத்துகள் இல்லை

Copying is disabled on this page!