ஏரியூர், செப். 15:
ஏரியூரில் கடைக்காரர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இணைந்து நடத்தி வரும் 15-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 15 ஆண்டுகளாக ஏரியூரில் உள்ள அனைத்து வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டுக்கான 15-ம் ஆண்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி, ஏரியூர் பேருந்து நிலையம் பகுதியில் 15 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம், வாஸ்து பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விநாயகர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜையின் போது 15 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட லட்டு படையலாக வைக்கப்பட்டது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் ஒரு பகுதியாக நேற்று காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விழாவையொட்டி புதன்கிழமை இரவு புராண தெருக்கூத்து நாடகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏரியூரைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். 15-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 15 அடி உயர விநாயகர் சிலை, 15 கிலோ லட்டு படையல் மற்றும் தொடர்ந்து மூன்று நாட்கள் அன்னதானம் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், ஏரியூர் பகுதியில் விழாக்கோலம் காணப்படுகிறது.
.gif)

