தருமபுரி – செப்டம்பர் 24:
தேசிய நாட்டு நலப்பணித் திட்ட நாள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வை முன்னிட்டு, தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
1961ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் நாள் தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 24ஆம் தேதி தேசிய நாட்டு நலத்திட்ட நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வர் கோ. கண்ணன் வழிகாட்டுதலின்படி தேசிய நாட்டு நலப்பணித் திட்ட நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனுடன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை, நல்லம்பள்ளி சார்பில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் இருந்து டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் கோ. பிரபாகரன், நல்லம்பள்ளி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் வாசுதேவன், மூத்த பேராசிரியர்கள் ப.வே. சாரதி, கே. விஜய தேவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முனைவர் பாலமுருகன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் சி. சந்திரசேகர், முனைவர் இரா. அசோக்குமார், முனைவர் சத்யா, கௌரவ விரிவுரையாளர்கள் சக்லத்லால், அர்ச்சனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணியில் ஏராளமான நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, “கொசுவை ஒழிப்போம், டெங்குவை கட்டுப்படுத்துவோம்” உள்ளிட்ட விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர். கல்லூரியில் இருந்து புறப்பட்ட பேரணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை சென்று, பின்னர் மீண்டும் அரசு கலைக்கல்லூரியை வந்தடைந்தது.
டெங்கு தடுப்பு குறித்து கருத்தரங்கம்
பேரணியைத் தொடர்ந்து தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் உடற்கல்வி இயக்குநர் முனைவர் பாலமுருகன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கோ. பிரபாகரன் மற்றும் நல்லம்பள்ளி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் வாசுதேவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அப்போது, நல்ல நீரில் வளரும் ஏடிஎஸ் கொசுக்கள் எவ்வாறு மனிதர்களுக்கு டெங்கு காய்ச்சலைப் பரப்புகின்றன, அவற்றின் வளர்ச்சி மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள், டெங்கு காய்ச்சலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டன. நிகழ்ச்சியின் நிறைவில் வட்டார மருத்துவ நல மேற்பார்வையாளர் சரவணன் நன்றியுரை வழங்கினார்.
.gif)

