தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் திரு. வே.சரவணன், இ.ஆ.ப., தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை முன்வைத்தனர்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு அரசு விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், அந்த திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளை முழுமையாக சென்றடைவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் 2026 ஜனவரி முதல் மே மாதம் வரை 89 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண் சாகுபடி இலக்காக 1,97,435 ஹெக்டேர் பரப்பளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில் ஜூன் 17ஆம் தேதி வரை 2,090 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
மேலும், நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துக்கள் உள்ளிட்ட விதைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நெல் விதைகள் 154.876 மெட்ரிக் டன், சிறுதானியங்கள் 77.616 மெட்ரிக் டன், பயறு வகைகள் 134.344 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய்வித்துக்கள் 66.312 மெட்ரிக் டன் அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட 9,560 மெட்ரிக் டன் உரங்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ஜிங்க் சொலுபிலைசிங் பாக்டீரியா உள்ளிட்ட உயிர் உரங்கள் 23,055 எண்ணிக்கையில் இருப்பில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருந்திய பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 7,746 விவசாயிகள் 7,417.68 ஏக்கர் பரப்பளவில் பயிர்களை காப்பீடு செய்துள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தோட்டக்கலைத் துறையின் மூலம் பழங்கள், காய்கறிகள், மருத்துவப் பயிர்கள், வாசனைப் பயிர்கள் மற்றும் பூச்செடிகள் உள்ளிட்டவை 777 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவுத் துறையின் மூலம் 53 விவசாயிகளுக்கு ரூ.53.26 லட்சம் மதிப்பிலான பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பட்டு வளர்ச்சி மற்றும் கூட்டுறவுத் துறை சார்ந்த அனைத்து நலத்திட்டங்களும் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சரவணன், வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி, வேளாண் துணை இயக்குநர் சித்ரா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)