தருமபுரி, அக். 27 -
தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ரூ.2.69 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நான்கு நலத்திட்டப் பணிகளை மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இன்று (27.10.2025) நடைபெற்ற ஆய்வின் போது, பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து அவர் கேட்டறிந்தார்.
பாலக்கோடு வட்டத்தில், ரூ.99 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகக் கட்டடத்தை அமைச்சர் பார்வையிட்டார். மேலும், PM-JANMAN திட்டத்தின் கீழ் பெலமரனஹள்ளி மற்றும் காந்திநகர் பகுதிகளில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் மலைவாழ் மக்களுக்காக கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தையும் ஆய்வு செய்தார்.
184.14 சதுர மீட்டர் (1982.08 சதுர அடி) பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தின் தரை தளத்தில் பல்நோக்கு மையம் மற்றும் அங்கன்வாடி பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலோசனை அறை, கணினி அறை, பயிற்சி அறை, திட்ட பொருட்காட்சி அறை மற்றும் ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி கழிவறைகள் ஆகியவை அமைக்கப்படவுள்ள இடங்களையும் பார்வையிட்டார். மின் வசதி, குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் அனைத்தும் சேர்த்தே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பணிகள் செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, பெலமரனஹள்ளி – பெருங்காடு பகுதியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூட கட்டடத்தையும், கும்மனூர் பகுதியில் PM-JANMAN திட்டத்தின் கீழ் ரூ.60 இலட்சத்தில் கட்டப்பட்டு வரும் மற்றொரு பல்நோக்கு மையத்தையும் அமைச்சர் ஆய்வு செய்தார். பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது பாலக்கோடு பேரூராட்சி மன்ற தலைவர் P.K. முரளி, தாட்கோ செயற்பொறியாளர் கண்ணன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன், மாவட்ட மேலாளர் தாட்கோ வி.ராமதாஸ், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய மற்றும் முன்னாள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

.jpg)