பாலக்கோடு, அக். 27-
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள எர்ரனஅள்ளி ஊராட்சியின் சமத்துவரபுரம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி வசித்து வரும் மக்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இப்பகுதியில் தார்சாலை, சாக்கடை, தெருவிளக்கு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் கடும் சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
பலமுறை ஓகேனக்கல் குடிநீர் இணைப்பு கோரி மக்களால் கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில், அரசு உயர்மட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டி சில வீடுகளுக்கு மட்டுமே குழாய் இணைப்புகள் வழங்கியது. ஆனால் முழுமையான குடிநீர் இணைப்புகள் வழங்கப்படாமல் மக்கள் இன்னும் தூரத்திலிருந்து தண்ணீர் எடுத்துவரும் நிலை தொடர்கிறது.
இதனால் இன்று காலை 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் காலிக்குடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சாலையோரத்தில் தர்ணா நடத்தினர். “வஞ்சிக்காதே வஞ்சிக்காதே சிறுபான்மையினரை வஞ்சிக்காதே, ஒதுக்காதே ஒதுக்காதே இஸ்லாமியரை ஒதுக்காதே” என கோஷமிட்டனர்.
இந்த நிலையைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகா மற்றும் ஜோதிகணேஷ் ஆகியோர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 15 நாட்களுக்குள் குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் தர்ணாவை கைவிட்டு அமைதியாக கலைந்தனர்.

.jpg)