திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி தருமபுரியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
தருமபுரி, நவம்பர் 26:
திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து தருமபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.
திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு இருந்தும், தமிழக அரசு தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை என பாஜகவினர் குற்றம்சாட்டினர். மேலும், நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்காமல் தமிழக அரசு செயல்படுவதாகக் கூறி, அரசின் நடவடிக்கைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக நகரத் தலைவர் சாய் ஆறுமுகம், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பாஜக மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக