Type Here to Get Search Results !

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் நீர் உந்துதல் தற்காலிக நிறுத்தம்!


தருமபுரி – செப்டம்பர் 24:
 


கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அண்மையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக காவிரி ஆற்றில் நீரின் கலங்கல் தன்மை (Turbidity) அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து 22.09.2026 அன்று காலை 8.00 மணி முதல் நீர் உந்துதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


ஒகேனக்கல் நீர் சுத்திகரிப்பு நிலையம், நீரின் கலங்கல் தன்மையின் அளவைப் பொறுத்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நீர் இரைப்பான்களை (Pump Sets) இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீரின் கலங்கல் தன்மை 100 NTU-க்கு மேல் அதிகரிக்கும் நிலையில், நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பாதுகாப்பான முறையில் இயக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது தலைமை நீரேற்று நிலையத்தில் பெறப்படும் நீரின் கலங்கல் தன்மை சுமார் 500 NTU ஆக அதிகரித்துள்ளதால், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தை உறுதி செய்வதற்கும், நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதற்கும், தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து நீர் உந்துதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


நீரின் கலங்கல் தன்மை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கலங்கல் தன்மை சுத்திகரிப்பு நிலையத்தை இயக்குவதற்கான அனுமதிக்கப்பட்ட அளவிற்கு குறைந்தவுடன், நீர் உந்துதல் உடனடியாக மீண்டும் தொடங்கப்பட்டு, குடிநீர் வழங்கல் வழக்கமான முறையில் தொடர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த இடைக்காலத்தில் பொதுமக்கள் தங்களது உள்ளூர் நீர் ஆதாரங்களை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies