தருமபுரி – செப்டம்பர் 24:
சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர் உள்ளிட்ட இதர உதவித்தொகைகளைப் பெறும் பயனாளிகளில், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படாத நபர்களுக்கு நடப்பு மாதத்திற்கான ஓய்வூதியம் GBM (Global Beneficiary Master) இணையவழியில் வரப்பெறாமல் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பயனாளிகளின் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கும் பணிகள் கடந்த 19.09.2026 முதல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களிலும் நடைபெற்று வருகின்றன. தொடர்புடைய வட்ட அலுவலகங்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில், கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஒரு பயனாளி இரண்டு வங்கி கணக்குகளை வைத்திருக்கும் பட்சத்தில், ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு மூலமாக மட்டுமே ஓய்வூதியம் பெற இயலும். எனவே, பயனாளிகள் உரிய வங்கிக்கு சென்று தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்து, அதற்கான ஆவணங்களை தனிவட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயனாளிகளுக்கு வங்கிகளில் உரிய முன்னுரிமை வழங்குவது தொடர்பாக, தருமபுரி முன்னோடி வங்கி மேலாளர் மூலம் அனைத்து வங்கி மேலாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், தபால் மணியார்டர் (eMo) மூலம் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்காக இந்திய அஞ்சலக வங்கி (IPPB) மூலம் வங்கி கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம்களும் நடைபெற்று வருகின்றன. சம்பந்தப்பட்ட அஞ்சலக கிளை மேலாளர் மற்றும் தபால்காரர் (Postman) மூலம், அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர், உள்வட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதனை பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய வங்கி கணக்கு தொடங்குதல் மற்றும் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்தல் ஆகிய பணிகள் இந்த வார இறுதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால், அனைத்து தனிவட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகங்களிலும் உதவிமையம் (HELP DESK) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உதவிமையங்களை அணுகி பயனாளிகள் தேவையான தகவல்களைப் பெற்று, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
.gif)

.jpeg)