தருமபுரி, ஆக. 28:
தருமபுரி மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல், பொருட்களை எடுத்துச் செல்லுதல், குதிரை சவாரி, சவாரி பயிற்சி பள்ளிகள், பந்தயம், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக வளர்க்கப்படும் குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்கள் அனைத்தும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு.வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
குதிரை உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களை தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். குதிரைகளின் நலன், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான பராமரிப்பு தொடர்பான விதிமுறைகளையும் உரிமையாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
பதிவு செய்ய என்னென்ன நிபந்தனைகள்?
குதிரைகளை பதிவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கால்நடைகளை பராமரிப்பதில் அலட்சியம் அல்லது கொடுமை இழைத்தது தொடர்பாக உரிமையாளர் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது.
குதிரைகளின் ஆரோக்கியம், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் அவை தங்கும் இடத்தின் பொருத்தம் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய அலுவலர்கள் குதிரை லாயங்கள் மற்றும் குதிரைகளை முழுமையாக ஆய்வு செய்வதற்கு உரிமையாளர்கள் அனுமதிக்க வேண்டும். மேலும், உரிமையாளரின் அடையாள ஆவணங்கள் மற்றும் குதிரைகளின் உரிமை தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
குதிரைகளுக்கு அடிப்படை வசதிகள் அவசியம்
குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்கள் தங்கும் இடங்களில் போதிய காற்றோட்டம், சுகாதாரம், பாதுகாப்பு, கழிவுநீர் மற்றும் கழிவு மேலாண்மை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பு, போதிய அளவு சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஆகஸ்ட் 30க்குள் பதிவு செய்ய வேண்டும்
எனவே, தருமபுரி மாவட்டத்தில் குதிரைகளை வைத்துள்ள அனைத்து உரிமையாளர்களும் தங்களிடம் உள்ள குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களை 30.08.2026-க்குள் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் இணையதளத்தில் பதிவு செய்து, விலங்குகள் நல விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பதிவு மற்றும் வழிகாட்டுதல்கள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகி பயன்பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
.gif)

.jpg)