Type Here to Get Search Results !

“100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு சிதைக்கிறது” இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி.


தருமபுரி | பிப்ரவரி 13:


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மாநில செயலாளர் வீரபாண்டியன் தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, மத்திய அரசு தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.


பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமான 100 நாள் வேலைத்திட்டத்தை (MGNREGA) மத்திய அரசு பல்வேறு விதங்களில் பாதிக்கிறது என்றார். நாடு முழுவதும் நடைபெற்ற பொது வேலைநிறுத்தம் பொதுமக்களின் வாழ்க்கையை சிதைக்கும் போராட்டம் அல்ல; உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்தும் ஜனநாயகப் போராட்டம் எனவும் அவர் குறிப்பிட்டார்.


44 தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்டங்களாக மாற்றியமைத்தது தொழிலாளர் உரிமைகளுக்கு எதிரானது என்றும், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் புதிய மசோதாக்களை தாக்கல் செய்வது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.


மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிப்பவை என்றும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை தேசவிரோத சக்திகள் என கூறுவோர் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாகவும், குறிப்பாக மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படாதது ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்தார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மாநில வாரியாக நிதி ஒதுக்கீட்டு விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் கோரினார்.


தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சில நலத்திட்டங்களை வரவேற்கிறோம் என்றாலும், டாஸ்மார்க் தொழிலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் நியாயமான கோரிக்கைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என CPI மாநில குழு வலியுறுத்துகிறது என்றார்.


மேலும், தமிழகத்தில் பதற்ற நிலையை உருவாக்கி அரசியல் பலன் பெற முயற்சி நடைபெறுகிறது என்றும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் கருத்துக்கள் மாநில அரசை அவமதிப்பதாக உள்ளதாகவும் வீரபாண்டியன் குற்றம்சாட்டினார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies