தருமபுரி, ஜன.08:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாய விலை கடையில் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, விலையில்லா வேட்டி மற்றும் சேலை ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஷ், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தருமபுரி நகரம் 9-வது வார்டில் உள்ள நியாய விலை கடையில், சுமார் 700 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 9-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் அ.மாதேஸ்வரன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் வார்டு செயலாளர் கனகராஜ், சேகர், வெங்கடேசன், சுமன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை பெற்றுச் சென்றனர். தமிழக அரசின் இந்த பொங்கல் பரிசுத் திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

