இவ்விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு, கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும், ஆய்வுக்கூட இராசயனர் பணி நியமன ஆணைகளையும் வழங்கி பேசும்போது தெரிவித்தாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சிறப்பாக செயல்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இயங்காத சர்க்கரை ஆலைகள் இயங்குவதற்கும், இயங்கி கொண்டிருந்த சர்க்கரை ஆலைகள் மேலும் சிறப்பாக செயல்பட்டு அதிக கரும்பு அரவையை மேற்கொண்டு, கரும்பு விவசாயிகளுக்கு உறுதுணையாகவும், அதிக இலாபம் ஈட்டுகின்ற அளவிற்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து விட்டன. சில சர்க்கரை ஆலைகள் செயல்படவில்லை.
அவ்வாறு நலிவடைந்த, செயல்படாத சர்க்கரை ஆலைகளை மீண்டும் சிறப்பாக இயங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு, சர்க்கரைத்துறையை கவனிக்கும் பொறுப்பை கூடுதலாக எனக்கு வழங்கினார்கள். சர்க்கரைத் துறையின் சார்பில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்ந்து பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டதோடு, நேரடி ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு, சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கும், உற்பத்தி திறன் அதிகரிப்பதற்கும் எது தடையாக இருக்கிறது என்பதை கண்டறிந்து அவற்றை களைவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக இன்று தமிழகத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சிறப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன.
இதன்படி, தமிழகத்தில் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. நாளொன்றுக்கு 1250 மெட்ரிக்டன் கரும்பு அரவைத்திறன் கொண்ட தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலக்கோட்டில் 1972-ல் தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றது. இந்த ஆலை கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, மேலும், விரிவாக்கம் செய்யப்பட்டு 1987-ஆம் ஆண்டிலிருந்து நாளொன்றுக்கு 2000 மெட்ரிக்டன் கரும்பு அரவைத்திறன் கொண்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையாக இயங்கி வருகின்றது.
இந்த சர்க்கரை ஆலையில் 35,800-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர். 2021-2022-ஆம் அரவை பருவம் கடந்த 7.3.2022 அன்று தொடங்கப்பட்டு, 1,13,383 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு 8.71 சதவிகித கட்டுமானத்தில் 98,669 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. அதேபோல் 2022-2023-ஆம் அரவை பருவம் வருகின்ற டிசம்பர் மாதம் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த பாலக்கோட்டில் உள்ள தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையானது மிகச்சிறப்பாக செயல்பட்டு அதன் சிறந்த செயல்திறனுக்காக தேசிய அளவிலும் மற்றும் மாநில அளவிலும் 12 விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சர்க்கரை ஆலையில் இணைமின் திட்ட பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த 2021-2022-ஆம் அரவை பருவத்தில் சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் இணைமின் திட்டம் தொடங்கப்பட்டு 12 மெகா வாட் இணைமின் உற்பத்தி நிலையத்தின் மூலம் 1.20 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு ஆலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மின்சாரம் போக சுமார் 67,43,700 யூனிட் மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கரும்பு உற்பத்தியாளர்களும், தாங்கள் உற்பத்தி செய்கின்ற கரும்புகளை கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கி, அதிக சர்க்கரை உற்பத்தி மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். இன்றைய தினம் பணி நியமன ஆணைகளை பெற்றுள்ள பணியாளர்களும், மேலும் இங்கு பணியற்றிக்கொண்டிருக்கின்ற பணியாளர்களும் தொடர்ந்து சிறப்பாக தங்கள் பணிகளை மேற்கொண்டு அற்பணிப்பு உணர்வோடு சிறப்பாக பணியற்றி இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.
கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சிறப்பாக இயங்கினால்தான் சர்க்கரை ஆலைகளும் வளர்ச்சி அடையும். கரும்பு விவசாயிகளும் பயனடைய முடியும். அதேபோல் இங்கு பணியாற்றுகின்ற பணியாளர்களும் உரிய பயன்களை அடைய முடியும். கடந்த ஆட்சி காலத்தில் சர்க்கரை ஆலைகளில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு உரிய பணியாளர்கள் நியமிக்காத காரணத்தால் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும் சிறப்பாக இயங்கவில்லை. அதனால் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து இருந்தது.
ஆனால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சிறப்பாக இயங்குவதற்கு தேவையான பணியாளர்களை நியத்திடவும், சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஆணையிட்டார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, சர்க்கரை ஆலைகளில் பணியாற்றி பணியிடையில் மரணமடைந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி, தமிழகத்தில் சர்க்கரைத்துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் 200 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணை வழங்க தேர்வு செய்யப்பட்டு, இதுவரை 110 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் பாலக்கோட்டில் உள்ள தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஏற்கனவே பணிபுரிந்து பணியிடையில் மரணமடைந்த 24 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த சர்க்கரை ஆலை சிறப்பாக இயங்குவதற்கு முக்கியமான பணி ஆய்வுக்கூட இரசாயனர் பணிகள். அத்தகைய ஆய்வுக்கூட இரசாயனர் பணியிடத்திற்கும் 3 நபர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கும் இன்றைய தினம் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் இன்றைய தினம் பணி நியமன ஆணை பெற்றுள்ளவர்கள் உள்ளிட்ட அனைவரும் உணர்வுப்பூர்வமாக சிறப்பாக பணியாற்றி, சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள். இவ்விழாவில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திருமதி. வெ. தீபனாவிஸ்வேஸ்வரி இஆப., மாவட்ட வருவாய் அலுவலர் / பாலக்கோடு, தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் திரு.ந.சக்திவேல், முன்னாள் அமைச்சர் முனைவர்.பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம்.பெ.சுப்பிரமணி, பாலக்கோடு, தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் திரு. தொ.மு.நாகராஜன் உள்ளிட்ட கூட்டுறவாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பாலக்கோடு, தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பெருக்கு அலுவலர் திரு.பி.வேணுகோபால் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக