பேரிடர் மேலாண்மை மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு; பேரிடர் உதவி எண்கள் அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 நவம்பர், 2022

பேரிடர் மேலாண்மை மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு; பேரிடர் உதவி எண்கள் அறிவிப்பு.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மாவட்ட கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (11.11.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:- பேரிடர் காலங்களில் உடனுக்குடன் தகவல்களை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை 24X7 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்களை நியமித்து தொடர்ந்து இக்கட்டுப்பாட்டு அறை செயல்பட வேண்டும். 


அதை பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். இச்சிறப்பு கட்டுப்பாட்டு மையத்தில் இயற்கை இடர்பாடுகளின் போது பெறக்கூடிய தகவல்களை உடனடியாக உரிய அலுவலர்களுக்கு தெரிவித்து, தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனுக்குடன் அந்தந்த துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை 24X7 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றது. இக்கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 04342-231500, 04342-231077, 04342-230067 ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு பேரிடர் பாதிப்புகள் ஏதேனும் இருந்தால் உடன் தகவல் தெரிவிக்கலாம். மேலும், 89038 91077 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் பேரிடர் பாதிப்பு குறித்த உரிய புகைப்படங்களுடன் கூடிய விவரங்களையும் அனுப்பி வைக்கலாம்.


மேலும் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்: 04342-260038, அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்: 04346-221400, தருமபுரி வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்: 04342-260927, நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்:04342- 244456, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்:04342-255636, பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்:04348-222045, காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்:04348-242411, அரூர் வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்: 04346-222023 மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்:04346-246544 ஆகிய எண்களிலும் பொதுமக்கள் மழைபாதிப்பு பேரிடர் தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம்.


வடகிழக்கு பருவமழை பெய்துவருவதை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் மழையினால் அதிகம் பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களையும், கடந்த மழைக்காலங்களில் அதிகம் பாதிப்புகளுக்குள்ளான பகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி, உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலுவலர்கள் முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.


மேலும், இத்தகைய இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழை வெள்ளத்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அப்பகுதிகளில் உடனடியாக நிவாரணப்பணிகளை மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துறை அலுவலர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். தகவல் தொடர்பிற்கு தேவையான வயர்லெஸ் கருவிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இப்பேரிடர் காலங்களில் வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை போன்ற துறைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 


தீயணைப்புத் துறையின் மூலமாக இயற்கை இடர்பாடுகள் மற்றும் தீவிபத்துகள் போன்ற பேரிடர்களில் பயன்படுத்துவதற்கு தீயணைப்பு வண்டிகள், தேவையான தீயணைப்பு கருவிகள், பாதுகாப்பு அலுவலர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், இம்மழைக் காலங்களில் மருத்துவதுறையின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிப்பதற்கு மருந்துகள், படுக்கைவசதிகள், மருத்துவ பொருட்கள் ஆகியவை தேவையான அளவு வைத்துக்கொள்ள வேண்டும்.


ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சிகள் துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற துறைகளின் மூலம் மழைக்காலங்களில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு மணல் நிரப்பப்பட்ட பைகளை தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவதற்கும், மழைநீர் தேங்கும் பகுதிகளில் உடனுக்குடன் நீரினை வெளியேற்றுவதற்கும் தேவையான ஜேசிபி இயந்திரங்கள், மர அறுவை இயந்திரங்கள் போன்றவற்றையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.


மேலும், வருவாய்த்துறையின் சார்பில் பேரிடர் மழைகாலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கு தேவையான முகாம்களை தேர்வு செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைக்காலங்களில் / மழை பெய்து கொண்டிருக்கும் பொழுதோ / பலமான காற்று வீசிக்கொண்டிருக்கும் பொழுதோ மின்கம்பங்கள் மற்றும் மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களையோ அல்லது மரக்கிளைகளையோ எக்காரணத்தை கொண்டும் வெட்டக்கூடாது.


பொதுமக்களும் மரங்களுக்கு அடியில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மின்கம்பங்கள் மற்றும் மின்சார கம்பிகளுக்கு அருகில் இருக்கும் மரங்களையோ அல்லது மரக்கிளைகளையோ அப்புறப்படுத்த வேண்டி இருந்தாலோ அல்லது மின்சார கம்பிகள் அறுந்து கிடந்தாலோ அதுகுறித்து தகவல்களை மின்சார வாரிய அலுவலர்களுக்கோ அல்லது கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். 


மின்சார கம்பிகள் அறுந்து கிடந்தால் எக்காரணத்தை கொண்டும் அதை தொடக்கூடாது, அதன் அருகிலும் செல்லக் கூடாது. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை ஏரி, குளங்கள், குட்டைகள், கிணறுகள் போன்ற நீர் நிலைகளில் இறங்கி குளிப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ, நீர் நிலைகளின் அருகில் விளையாடுவதற்கோ அனுமதிக்க கூடாது. குழந்தைகளை பத்தரமாக பார்த்துகொள்ள வேண்டும். மேலும், மழைக்காலங்களில் ஆற்றுப்பகுதிகளில் திடீரென வெள்ளபெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதையோ, ஆற்றை கடக்க முற்படுவதையோ, கால்நடைகளை ஆற்றின் குறிக்கே அழைத்து செல்வதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


தருமபுரி மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் மழைக்காலங்களில் மிகவும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பதோடு பேரிடர் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 04342-231500, 04342-231077, 04342-230067 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், 89038 91077 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் பேரிடர் பாதிப்பு குறித்த உரிய புகைப்படங்களுடன் கூடிய விவரங்களை தெரிவிக்கலாம். 


மேலும், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, அனைத்து துறை அலுவலர்களும் தருமபுரி மாவட்டத்தில் தேவையான அனைத்து பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளில் தயார் நிலையில் இருப்பதோடு, தொடர்ந்து விழிப்புடன் கண்காணித்திட வேண்டும்.


இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.பழனிதேவி, மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் திரு.கே.ரமேஷ் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad