இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 423 மனுக்கள் வரப்பெற்றன.
இம்மனுக்களை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அம்மனுக்களை வழங்கி, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கடந்த 31.10.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்களிடம் அரூர் வட்டம், வேப்பம்பட்டி தரப்பு, மாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த இருளர் இன மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வேண்டுமென கோரிக்கை மனு அளித்தார்கள்.

இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரூர் வருவாய் வட்டாட்சியரிடம் வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின்படி, இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இன்றைய தினம் நடைபெற்ற இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேப்பம்பட்டி தரப்பு, மாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த தகுதியுள்ள 20 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
இந்த இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பெற்றுகொண்ட இருளர் இன மக்கள் உடனடியாக பட்டாக்கள் வழங்கிட உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். மேலும், நாங்கள் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி மனுக்களை வழங்கிய 15 நாட்களுக்குள்ளாகவே, இக்குறுகிய காலத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் எங்களது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.
மேலும், இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தருமபுரி மாவட்ட வருவாய் அலகு, காரிமங்கலம் வட்டம், பன்னிகுளம் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்த திரு.மு.காளியப்பன் என்பவர் பணியிடையில் மரணமடைந்ததை முன்னிட்டு, அவரது வாரிசுதாரரான அவரது மகன் திரு.கா.அரிதாஸ் என்பவருக்கு தருமபுரி வருவாய் கோட்ட அலுவலகத்தின் பதிவுறு எழுத்தர் பணியிடத்திற்கான பணிநியமன உத்தரவு ஆணையினையும் வழங்கினார்கள்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்களிடம் தருமபுரி வட்டம், வெள்ளைய கவுண்டன் பாளையம், மேளக்காரத் தெருவைச் சேர்ந்த திரு.தாமரைக்கண்ணன்-திருமதி.வடிவழகி தம்பதியினரின் மகன் திரு.குமார் என்பவர் காயம் அடைந்து, கால்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், தனக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை வேண்டுமென இன்று (14.11.2022) கோரிக்கை மனு வழங்கினார்.
இம்மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அலுவலர்களிடம் அம்மனுவினை வழங்கி, இம்மனு மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அலுவலர்கள் இம்மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்களை உடனடியாக பதிவேற்றம் செய்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை தயார் செய்து, இன்றைய தினமே தருமபுரி வட்டம், வெள்ளைய கவுண்டன் பாளையம், மேளக்காரத் தெருவைச் சேர்ந்த திரு.குமார் அவர்களுக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையினை அவரது தாயார் திருமதி.தா.வடிவழகி அவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திருமதி.வெ. தீபனா விஸ்வேஸ்வரி இஆப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.என்.பழனிதேவி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி. வி.கே.சாந்தி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) / மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.வி.இராஜசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.கவிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக