Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

மக்கள் சேவையில் மருத்துவத்துறை - நூற்றாண்டு விழா.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பொது சுகாதாரம் மற்றம் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் மக்கள் சேவையில் மருத்துவ துறை நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த நூற்றாண்டு விழா ஜோதி வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் மருத்துவதுறையில் சிறப்பாக சேவை ஆற்றிய சிறந்த அலுவலர்களுக்கு பாராட்டு விழா இன்று (21.10.2022) நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையேற்று இந்நூற்றாண்டு விழா ஜோதியினை வரவேற்று, ஜோதியினை பெற்றுகொண்டு, மருத்துவத்துறையில் சிறப்பாக சேவை ஆற்றிய சிறந்த அலுவலர்களை பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி, பேசும்போது தெரிவித்ததாவது:உயிர்காக்கும் உன்னத பணிகளை மேற்கொண்டு வருகின்ற மருத்துவர்களை மருத்துவர்களாக பார்த்தது முந்தைய காலம். ஆனால் கொரோனா பெருந்தொற்று என்ற மாபெரும் கொடிய நோய் தொற்று ஏற்பட்ட பேரிடர் காலத்தில் மருத்துவர்கள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் உயிர்களை காக்கும் மகத்தான பணிகளை மேற்கொண்ட மருத்துவர்களை உயிர்காக்கும் கடவுளாக பார்க்கும் நிலை ஏற்பட்டது.


அத்தகைய சிறப்பு வாய்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்ற மருத்துவதுறை சார்ந்த அனைவருக்கும் மக்கள் சேவையில் மருத்துவத்துறையின் நூற்றாண்டு விழாவில் பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றேன்.  


தருமபுரி மாவட்டம் வளர்ந்து வருகின்ற ஒரு சிறப்பான மாவட்டம். வளர்ச்சியை எதிர்நோக்கி கொண்டிருக்கின்ற மாவட்டம். இத்தகைய தருமபுரி மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகள், மலைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு மருத்துவ சேவையை அளிப்பதற்காக அந்த கிராமங்களின் அருகிலேயே மருத்துவமனை கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்க்கூடிய ஒன்றாகும். அதிலும் குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை சிறப்பாக நமது தருமபுரி மாவட்டத்தில் அளிக்கப்பட்டு வருகின்றது.  தமிழகத்திலேயே அதிக அளவில் தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் அதிகளவில் குழந்தை பிறப்பு உள்ளது என்பது பாராட்டுக்குரியது. 


இப்படிப்பட்ட தருமபுரி மாவட்டம் வளர்ச்சியை நோக்கி வந்துகொண்டிருக்கின்ற இம்மாவட்டத்தில் உள்ள குடும்பங்களில் அதிக குழந்தைப்பேறு இருக்கின்றது. இதன் காரணமாக, அவர்கள் பொருளாதாரத்திலும், சுகாதாரத்திலும் பின்தங்கி இருக்கின்ற நிலை ஏற்படுவதோடு, அத்தகைய குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கும் இயலாத சூழ்நிலை இருந்து வருகின்றது. சிறிய குடும்பம் சீரான குடும்பம். இரண்டு குழந்தைகள் மட்டுமே போதும் என்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம். ஒன்று பெற்றால் ஒளிமயமான வாழ்க்கை. நாம் இருவர் நமக்கு இருவர், ஆணோ, பெண்ணோ இரண்டு குழந்தைகள் போதும் என்ற எண்ணங்களை மக்களுக்கு பதிய வைக்க வேண்டும். 


 

அதிக குழந்தைகளை பெற்று எடுப்பதனால் அத்தாய்மாரின் ஆரோக்கியத்திற்கு கேடு என்பதையும், அதிக குழந்தைகள் இருப்பதனால் அக்குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க முடியாமல் போகும். அதனால் அனீமியா போன்ற ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளாக அக்குழந்தைகள் மாறும். அவர்களின் ஆரோக்கியம் மிகவும் கெடும் என்பதையும், சிறு வயது திருமணங்கள் முற்றிலும் தடுக்க மற்றும் தவிர்க்கப்பட வேண்டும். 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கும், 21 வயதிற்கு கீழ் உள்ள ஆண்களுக்கும் திருமணம் செய்து வைத்தால் அது குழந்தை திருமணம். அத்திருமணம் சட்டப்படி குற்றம் என்பதையும், அத்திருமணத்தை செய்பவர்களும், செய்து வைப்பவர்களும் தண்டனைக்குரியவர்கள் என்பதையும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இப்பணிகளை  கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் சமூக நலத்துறை ஆகிய  3 துறைகள் முக்கியமாக மேற்கொள்ள வேண்டும். 


மக்களின் சேவையில் மருத்துவத்துறை நூற்றாண்டுகளாக சேவை ஆற்றி கொண்டிருக்கின்றது. அத்தகைய உயிர்காக்கும் உன்னத சேவையை மக்களுக்காக ஆற்றி வருகின்ற சுகாதாரத்துறைக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்வதோடு, மேலும் தங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, மக்களுக்கு தொடர்ந்து மருத்துவ சேவை புரிந்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.


பொது சுகாதாரம் மற்றம் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் மக்கள் சேவையில் மருத்துவ துறை நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த நூற்றாண்டு விழா ஜோதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள்  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரவேற்று, ஜோதியினை பெற்றுகொண்டார்கள்.


இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள்  மருத்துவத்துறையில் சிறப்பாக சேவை ஆற்றிய ஓய்வு பெற்ற 46 மருத்துவர்கள், அலுவலர்கள், பணியாளர்களுக்கும், பொது சுகாதாரம் மற்றம் நோய் தடுப்பு மருந்து துறையில் தற்போது  பணிபுரிந்து கொண்டிருக்கின்ற 31 மருத்துவர்கள், அலுவலர்கள், பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். மேலும், நூற்றாண்டு விழா ஜோதி வரவேற்பினை முன்னிட்டு, சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவத்துறையை சார்ந்த 34 மருத்துவர்கள், அலுவலர்கள், பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.


இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.ச.சௌண்டம்மாள், அரசு தருமபுரி மருத்துவக்கல்லுரி மருத்துவமனை முதல்வர் (பொ) மரு. சிவக்குமார், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு. எம். சாந்தி, மருத்துவப்பணிகள்  (குடும்ப நலம்) துணை இயக்குநர் மரு. மலர்விழி, மருத்துவப்பணிகள் (காசநோய்) துணை இயக்குநர் மரு. ராஜ்குமார்,  மருத்துவப்பணிகள் (தொழுநோய்) துணை இயக்குநர் மரு. புவனேஸ்வரி, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி  மருத்துவமனை குழந்தைகள் நல தலைமை மருத்துவர் மரு. ரமேஷ்பாபு, அரூர் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் மரு.ராஜேஷ் கண்ணா, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி  மருத்துவமனை மகப்பேறு தலைமை மருத்துவர் மரு. மலர்விழி, பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மரு. வாசுதேவன், தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மரு.தொல்காப்பியன் உட்பட மருத்துவத்துறை மருத்துவர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், ஓய்வுபெற்ற மருத்துவத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் கல்வித்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884